Published : 18,Oct 2018 10:35 AM

‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு

Centre-forms-panel-chaired-by-Home-Minister-Rajnath-Singh-for-me-too-issue

MeToo பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க உள்ளது.

MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் பலரும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகின்றது. இந்தி நடிகை ஒருவர், நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை இந்த ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். நடிகை கங்கனா ரனாவத், ‘குயின்’ இயக்குனர் மீதும் நடிகை புளோரா தயாரிப்பாளர் கவுராங் தோஷி மீதும் புகார்களை கூறினர். மேலும் இந்தி பட இயக்குனர் சஜித் கான் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து ‘ஹவுஸ்புல்4’ படத்தில் இருந்து நானா படேகர், இயக்குனர் சஜித் கான் விலகினர். 

தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கவிஞர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் லீனா மணிமேகலை மீது புகார் அளித்தார்.

MeToo புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சூழலில் பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. 

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மேனகா காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் இந்தக் குழுவில் இடம்பெறுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. MeToo புகார்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டங்கள் மற்றும் புகார் அளிக்கும் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்