Published : 07,Sep 2018 03:07 PM
அற்புதம்மாளின் போராட்டத்திற்காக பேரறிவாளன் வெளியே வரவேண்டும் : விஜய் சேதுபதி

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்சேதுபதி, “25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பேரறிவாளன் வெளியே வரணும். அந்த அம்மா கிட்ட போய் அந்தக் குழந்தை சேரணும். தயவு செய்து பேரறிவாளன் அண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முதலில் தமிழக அரசு தரப்பில் அவரது விடுதலை பற்றிய கோரிக்கையை வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த அம்மாவின் (அற்புதம்மாள்) போராட்டம் ஒரு தவம். தாயிடம் இருந்து குழந்தையை பிரிப்பது மிகப்பெரிய பாவம். அது இத்தனை வருடங்கள் நடந்துவிட்டது. அது போதும். அற்புதம்மாளின் போராட்டத்திற்காகவே பேரறிவாளன் வெளியே வரவேண்டும்” என்றார்.
முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து, ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.