Published : 06,Aug 2018 01:24 PM
“கருணாநிதியின் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால்” - அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவருகிறார். இதனையடுத்து, பல அரசியல் கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக ஏற்கனவே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதலே கருணாநிதியின் உடல்நிலையில் லேசாக பின்னடைவு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. நேற்று குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் சந்தித்து சென்ற பின்னரும் புகைப்படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை தற்போது புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த மருத்துவமனை அறிக்கையில்,“கருணாநிதியின் வயது காரணமாக அவரது முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பதில் சவால் உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும், மருத்துவ உதவியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.