Published : 14,Jul 2018 01:23 PM
சுந்தர் பிச்சை கேரக்டரில் நடிக்கிறார் ‘சர்க்கார்’ விஜய்?

கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை வேடத்தில் நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருவதாக செய்தி கசிய தொடங்கியுள்ளது.
‘மெர்சல்’ ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்குப் பிறகு உலக அளவிலான தமிழர்களை மையமாக வைத்து சில விஷயங்களை தன் படத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் விஜய் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. ‘சர்கார்’ படமும் சர்வதேச அளவில் கவனம் பெற வேண்டும் என்பதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெளிவாக இருக்கிறார். ‘மெர்சல்’ வெளியீட்டின் போதுதான் பிரச்னை தலைத்தூக்கியது. ஆனால் ‘சர்கார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சை தீப்பிடிக்க தொடங்கிவிட்டது.
இந்நிலையில் ‘சர்கார்’ படத்தில் விஜய், சர்வதேச அளவில் சாதனைப் படைத்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் வேடத்தில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது. சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்து இங்கேயே படித்தவர். இன்று உலக அளவில் பெரும் புள்ளியாக வலம் வருபவர். கூகுள் பங்குகளின் உயர்வால் இவரது சம்பளம் ரூ.2,500 கோடியை தொட்டுள்ளது. ஆகவே இவர் ‘ஆளப்போறான்’ தமிழர்களின் அடையாளமாக மாறியிருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்க ரிட்டர்னாக விஜய் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. அமெரிக்காவில் மிகப் பெரிய தொழில்நுட்ப வல்லுநராக இருக்கும் விஜய் இந்தியா திரும்புகிறார். அப்போது அவர் இங்கு விவசாயிகள் படும் கஷ்டங்களையும் அதற்கு பின்புலமாக நடக்கும் அரசியல்வாதிகளின் ஊழலையும் காண நேர்கிறது. ஆகவே அவர் ஊழலுக்கு எதிராகவும் அரசியல் அதிகாரத்திற்கு எதிராகவும் களம் காண்கிறார். இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கதாப்பாத்திரம் கிட்டத்தட்ட கூகுள் சுந்தர் பிச்சையை முன் மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிய தெடங்கி உள்ளன. ஆனால் இதனை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.