Published : 25,May 2018 03:55 PM

ஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா? வெடிக்கும் சர்ச்சை? 

Savitri-Gemini-Ganesan-love-story--Botched-affair-to-the-bottle

‘நடிகையர் திலகம்’ படம் கீர்த்தி சுரேஷூக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் சாவித்திரியின் உறவினர்களுக்கோ,ஜெமினி கணேசனின் உறவினர்களுக்கோ அது மனக் கசப்பை வாரி வழங்கியிருக்கிறது. இந்தப் படம் வந்த பிறகு படுத்தப்படுக்கையாக கிடந்த சாவித்திரியின் பழைய வரலாற்றை கிளப்ப தொடங்கியுள்ளனர் பலரும். சந்திரபாபு இறந்ததற்கு பின்னால் சவித்திரியே காரணம் என்கிறார் ஒருவர். இன்னொருவர் அவருக்கு பலருடன் நெருக்கம் இருந்தது என்கிறார். அன்பும் அழகுமாக அடையாளப்பட்டிருந்த சாவித்திரியின் முகம், வேறு முகமாக மாறியிருக்கிறது. உண்மையில் சாவித்திரி எப்படி? அவர் வீழ்ச்சிக்கு யார் காரணம்? 

 “திரையுலகில் முன்னுக்கு வர பலவித்தத்திலும் போராடிய சாவித்திரிக்கு கண்ணியத்தைக் கற்றுக் கொடுத்து பாதுக்காப்பையும் அளித்து, வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் நின்று மனைவி என்ற கெளரவத்தையும் கொடுத்தவர் என் அப்பா. அவரைப்போய் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தவர் என்பதைபோல காட்டி இருப்பது அபாண்டமானது. மனைவியாக கைப்பிடித்தவரையே தவறான பழக்கங்களுக்குத் தள்ளிவிட்டவர் என்று காண்பிப்பது நியாயமற்ற செயல். காதலித்தவளை காப்பாற்ற நினைத்தும் முடியாமல் மனம் குமுறி என் அப்பா துடித்ததை நேரில் பார்த்தவள் நான்.

சாவித்திரியின் வெற்றியைக் கண்டு அவர் ஒருநாளும் மனம் புகைந்தவரில்லை. தன்னுடைய வாழ்க்கையில் வந்த பெண், தன்னுடைய சொந்த காலில் நின்று சாதித்து கண்ணியமானவளாக வாழ ஆசைப்பட்டத்தை எண்ணி பெருமைப்பட்டவர்தான் என்னுடைய அப்பா” என குமுறி இருக்கிறார் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ். அவரை போலவே தனது சாவித்திரியுடனான நட்பை பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் ராஜேஷ். அவர் தந்துள்ள பல தகவல்கள் இளம் தலைமுறை அறியாதது. அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. 

“அண்ணா நகர்ல என் ‘அந்த ஏழு நாட்கள்’ ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்தது. அப்போ அவர் வீட்டிப் பக்கத்துல நாங்க இருக்கோம்னு சொன்னாங்க. அதனால நாங்க போய் பார்க்கலாம்னு முடிவு பண்ணோம். அங்க போனதும் வீட்ல ஒரு நர்ஸ் இருந்தாங்க. நாங்க சாவித்திரி அம்மாவ விசாரித்தோம். அவங்க எங்களை பார்த்ததும் அப்படியே தயங்கினாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் இருங்கனாங்க. உடனே ஜெமினி கணேசனுக்கு போன் போட்டு கேட்டாங்க. அவர் பரவாயில்ல, அவர் அங்களோட ஃபேன் விடுங்கனு சொன்னதற்கு அப்புறம் வீட்டுக்குள்ள அனுமதிச்சாங்க. உள்ள இருந்து 12 வயசு பையன் வந்தான். சதீஷ் தடியாக இருந்தான். எந்தவித சலனமும் இல்லாம இருந்தான். ‘ஒரு 15 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. ட்ரெஸ் பண்ணிக்கிட்டிருக்கோம்’னு சொன்னான்.

ஒருகாலத்தில் அந்தம்மாவை நான் அப்படி ரசிச்சவன். என்னால இந்தக் காட்சியை விவரிக்கவே முடியல. ஒருகோடி பேருக்கிட்ட அவங்களை காட்டி யாருனு கேட்டா யாராலும் அடையாளம் கண்டுப்பிடிக்கவே முடியாது. அவங்க தோற்றம் அப்படி இருந்தது. அவங்க தோற்றத்தை என்னால விவரிக்கவே முடியாது. ஆனா அவங்க உடம்பும்ல உயிர் மட்டும் இருந்தது. எனக்கு ஒண்ணுமே புரியல. என்னடா வாழ்க்கைனு தோனியது. பாணுமதி அம்மா மியூசிக் படிச்சவங்க. அவங்களுக்கு அவ்வளவு ஞானம் இருந்தது. அவங்களை ‘உனக்கு என்ன அறிவு இல்லையா? நீ ஏன் டைரக்ட் பண்ணக்கூடாது?’னு பலர் உசுப்பிவிட்டாங்க. 

அதைபோல சாவித்திரி அம்மாவையும் உசுப்பிவிட்டு, அவங்களையும் டைரக்‌ஷன் பண்ண வச்சாங்கா. ஊர் பேச்சைக்கேட்டு அவங்க டைரக்‌ஷன்ல இறங்கி பயங்கர நஷ்டமானாங்க. கடைசியில உசுப்பிவிட்டவங்க எல்லாம் ஓடிட்டாங்க. யார் யார்கிட்ட பணம் கொடுத்து வச்சிருந்தாங்களோ, நிலம் கொடுத்து வச்சிருந்தாங்களோ எல்லாருமே நாமம் போட்டுட்டாங்க. மன அமைதி கெட்டு படுத்தப்படுகையாக கிடந்தாங்க. ‘எங்கே நிம்மதி’ போல இருந்தாங்க. கடைசியா கூட டிரைவர் மட்டும் இருக்குறான். அவனை கூப்பிட்டு பேக்ல இருந்த ‘ஆர்சி புக்கையும், கார் சாவியையும் கொடுத்து இத வச்சு பொழைச்சுக்கோ’னு சொல்லி அனுப்பிட்டாங்க. அத எடுத்துகிட்டுப்போய் கேரளாவுல நிறைய டாக்சி வாங்கி பெரிய பணக்காரனாகி சமீபத்துலதான் அவர் இறந்தாப்பல.” என்றவர் சமீபத்தில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை பயோபிக் படமான ‘நடிகையர் திலகம்’ படம் பற்றி பேசத் தொடங்கினார்.

“ஜெமினி மாமாவை சாவித்திரி அம்மா லவ் பண்ணதே முதல்ல தப்பு. அப்புறம் அவரை குறை சொல்லக்கூடாது இல்ல. அவர்தான் எனக்கு குடிக்கக் கொடுத்தார்னு சொல்லக்கூடாது இல்ல. ஒரு நடிகையாக அவருக்கு தனிப்பட்ட தொடர்புகள் இருந்திருக்கலாம். இவங்க தப்பு பண்ணது, ஜெமினி மாமாவை கல்யாணம் பண்ணது. இவங்க கணவன் மனைவி சண்டையில அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் கடவுள் புண்ணியத்தில் அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கு.

சாவித்திரி அம்மாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்ட இரண்டு, மூன்று நடிகர்களை எம்.ஜி.ஆர் போன்ல கூப்பிட்டு மிரட்டி இருக்கார் தெரியுமா? ஒருத்தர் ரெண்டு பேரை பழி வாங்கி இருக்கார். அந்தப் பழியை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார். ஆனால் சாவித்திரிக்காக நான் செஞ்சேன்னு அவர் வெளிய சொல்லவே இல்ல. சாவித்திரி அம்மாவுக்கு அவரோட நடிப்பதில் ஆர்வம் இருந்தது” என்கிற ராஜேஷ் சாவித்திரி அம்மாவிற்கு ஜெமினி கணேசன்தான் குடிக்க கற்றுக் கொடுத்தார் என்பதை மறுக்கிறார். இந்த விஷயத்தில் ஜெமினி மாமாவின் தவறு 40 சதவீதம் என்றால் சாவித்திரியின் தவறு 60 சதவீதம் என்கிறார்.    

‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ என்பது சாவித்திரியின் பாட்டு மட்டும் இல்லை. அவர் வாழ்க்கையும் அப்படிதான். அதைதான் இன்று பலரும் கிளற ஆரம்பித்திருக்கிறார்கள்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்