Published : 12,May 2018 12:51 PM
மஹா தாயி நதியும் காவிரிப் பிரச்சனையும்

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்ததும் காவிரிப் பிரச்சனையில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுவிடும் என்று பாஜகவினர் பேசி வருகிறார்கள். அவர்களின் கூற்று உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டதும் ஆகும். ஏனென்றால், மஹா தாயி நதியில், தாங்கள் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்திடமிருந்து கர்நாடகாவுக்குத் தண்ணீர் பெற்றுத்தர முடியாத பா.ஜ.க, காவிரி பிரச்சனையைத் தீர்த்து விடும் என்பது கட்டுக்கதையன்றி வேறல்ல.
காவிரி பிரச்னையைப் போலவே கர்நாடகாவுக்கும், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் இடையே மஹா தாயி நதிநீர்ப் பிரச்சனை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கர்நாடகாவில் மஹா தாயி என்றும், கோவாவில் மாண்டோவி என்றும் அழைக்கப்படுகிற அந்த நதி, கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பீம்காட் என்ற இடத்தில் தோற்றம் கொள்கிறது. மொத்தம் 111 கிலோ மீட்டர் ஓடி அரபிக் கடலில் கலக்கும் அந்த நதியின் 35 கிலோ மீட்டர் மட்டுமே கர்நாடகாவில் ஓடுகிறது. மீதமுள்ள 76 கிலோ மீட்டரில் பெரும் பகுதி கோவாவிலும், சிறு பகுதி மகாராஷ்டிராவிலும் ஓடுகிறது. அந்த நதியின் பாசனப் பரப்பில் 18 சதவீதம் கர்நாடகா, 4 சதவீதம் மகாராஷ்டிரா, 78 சதவீதம் கோவாவில் உள்ளது. வட கர்நாடகாவில் விவசாயத்துக்காக மட்டுமல்ல ஹூப்ளி,தார்வாட் முதலான நகரங்களின் குடிநீர் தேவைக்கும் அந்த நதியைத்தான் மக்கள் நம்பியுள்ளனர்.
1980ஆம் ஆண்டு வடக்கு கர்நாடகா மாவட்டங்களை வறட்சி தாக்கியபோது அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு மிகப்பெரிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். விவசாயத்திற்குத் தண்ணீர் வேண்டுமென்று அவர்கள் போராடினார்கள். அப்போராட்டத்தின் போது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர், எஸ்.ஆர்.பொம்மை தலைமையில் கர்நாடக அரசு கமிட்டி ஒன்றை அமைத்தது. ‘வட கர்நாடகா விவசாயிகளின் பிரச்னை தீர்க்கப்பட வேண்டுமென்றால், மஹா தாயி நதியையும், மாலப்பிரபா நதியையும் இணைக்க வேண்டும்’ என்று எஸ்.ஆர்.பொம்மை கமிட்டி பரிந்துரை செய்தது. அந்த இரண்டு நதிகளையும் இணைப்பது தொடர்பாக 1989ஆம் ஆண்டு கர்நாடகாவுக்கும், கோவாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. மஹா தாயி நதியின் கிளை நதிகளான கால்பா, மண்டூரா ஆகியவற்றின் குறுக்கே அணைகளைக் கட்டுவதற்கு அந்த ஒப்பந்தத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
2002ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. அப்போது கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா 1989ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மஹா தாயி நதியில் அணைகளைக் கட்டுவதற்கு முடிவெடுத்தார். மஹா தாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி. தண்ணீரை மாலப்பிரபா நதிக்குத் திருப்பி விட்டால் வட கர்நாடக விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடும் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கருதினார். அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதியையும் பெற்றார். ஆனால், கோவாவில் இருந்த பாஜக அரசு மஹா தாயி நதியின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கு உடன்படவில்லை.
நதிநீர் தாவா சட்டம் 1956 பிரிவு 3ன் கீழ் நடுவர் மன்றம் ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு, மனோகர் பாரிகர் தலைமையிலான கோவா மாநில பாஜக அரசு வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசு அதன்பின்னரும் பல்வேறு சமாதான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கோவா மாநில அரசோ நடுவர் மன்றம் அமைக்கச் சொல்லி 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன் விளைவாக 2009ஆம் ஆண்டு‘மஹா தாயி நதிநீர் பிரச்னை நடுவர் மன்றம்’ மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அதற்கான உத்தரவு 2010 நவம்பரில் வெளியானது.
2014ஆம் ஆண்டு மத்தியில் பதவியேற்ற பா.ஜ.க. அரசு, 2016 ஆம் ஆண்டுக்குள் மஹா தாயி நடுவர் மன்றம் தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நடுவர் மன்றம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யாததால் இரண்டுமுறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டு தற்போது 2018 ஆகஸ்டு 20க்குள் நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நடுவர் மன்றத்தில் இந்தப் பிரச்சனை நிலுவையில் இருக்கும் போதே 7.56 டி.எம்.சி. தண்ணீரை தங்களுக்கு வழங்குமாறு கர்நாடகா அரசு நடுவர் மன்றத்தின் முன்னால் மனு தாக்கல் செய்தது. அதற்கு கோவா மாநில பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நடுவர் மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
கர்நாடகாவில் தேர்தல் நெருங்க நெருங்க மஹா தாயி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையும் தீவிரமடைந்தது. தங்களுக்குத் தண்னீர் தர மறுக்கும் கோவாவின் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2017டிசம்பர் 27 ஆம் நாள் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் திரண்டு கர்நாடகாவில் இருக்கும் மல்லேஸ்வரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 2018 ஜனவரி 25ஆம் தேதி கன்னட அமைப்புகள் இந்தப் பிரச்னைக்காக மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தையும் நடத்தினர்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனே இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, கர்நாடகாவுக்கு சேர வேண்டிய தண்ணீரை கோவாவிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். குடியரசுத் தலைவர் எங்களை சந்திப்பதற்கு அனுமதிக்கவேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வோம் என அறிவித்தார்கள். ஆனால், ‘கர்நாடகாவுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கொடுக்க மாட்டோம்’ என்று கோவாவில் இருக்கும் பா.ஜ.க. அரசு மறுத்து விட்டது.
மஹா தாயி நதிநீர்ப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கர்நாடகாதான் லிங்காயத்துகள் அடர்த்தியாக வாழும் பகுதியாகும். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவரான எடியூரப்பாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் லிங்காயத்துகளின் ஆதரவை வென்றுவிடலாம் என பாஜக நினைக்கிறது. லிங்காயத்துகளின் சாதி உணர்வைத் தூண்டி நதிநீர்ப் பிரச்சனையை மறக்கடித்துவிடலாம் என்பதே பாஜகவின் தந்திரமாக இருந்தது.
பாஜகவின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட காங்கிரஸ் அதை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திக்கொண்டது. ‘ பிரதமர் மோடி அவர்களே மஹா தாயி பிரச்சனைக்குத் தீர்வு காண மூன்று மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்’ என ஹூப்ளியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
கர்நாடகா மாநிலத்திற்கு உரிமையுள்ள மஹா தாயி ஆற்றுத் தண்ணீரை தமது கட்சி ஆட்சி நடத்தும் கோவாவிலிருந்து தமது கட்சிக்கு 17 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தந்த கர்நாடகாவுக்கு பெற்றுத்தர முடியாத பா.ஜ.க.வினர் எப்படி தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ள காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தருவார்கள்? ‘கேப்பையில் நெய் வழிகிறது’ என பாஜகவினர் சத்தியம் செய்யலாம், அதைத் தமிழ்நாட்டு மக்கள் நம்பவேண்டுமே!