Published : 23,Apr 2018 06:34 AM
மனைவியை நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக் கணவன்

அசாமில் திருமணமான மூன்று நாட்களில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அசாம் மாநிலம் கரீம்கஞ்சு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பல்வேறு கனவுகளுடன் கணவரின் இல்லத்திற்கு சென்ற அந்தப் பெண்ணுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் காத்திருந்தது. திருமணம் ஆன நாள் முதலே வரதட்சனைக் கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் திருமணமான மூன்றாவது நாளே காலம் முழுவதும் காக்க வேண்டிய கணவன் பணத்தாசையில் நண்பர்களின் காமப் பசிக்கு மனைவியை இறையாக்கியுள்ளான். நண்பர்கள் இருவருடன் சேர்ந்து தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அந்தப் பெண் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மருத்துவமனை மூலம் தான் இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், அந்தப்பெண்ணிடம் வரதட்சனைக் கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினரால் தர இயலவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி கணவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.ஏப்ரல் 20ஆம் தேதி அந்தப்பெண் புகார் அளித்ததை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.