Published : 13,Apr 2018 05:12 PM
மோடி, எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: பாடகர் கோவன் கைதும்.. ஜாமீனும்..!

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் திருச்சி அரவானூரிலுள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 24ஆம் தேதி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற கோவன், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பழனிசாமி குறித்து விமர்சிக்கும் பாடலை பாடியதாக கூறி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கதவை உடைத்து காவல்துறையினர் கைது செய்திருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
கோவன் மீது பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் அச்சுறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவன், கடந்த 2015ஆம் ஆண்டு மதுவிற்கு எதிராக பாடல் பாடி தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோவனை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து, நீதிபதி கௌதமன் உத்தரவிட்டார். இதனையடுத்து, கோவன் விடுவிக்கப்பட்டார்.