Published : 31,Mar 2018 06:41 AM
காவிரிப் பிரச்சனை : துரோகத்தின் மூன்று முனைகள்

காவிரிப் பிரச்சனையில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் நீதி, நிர்வாகம், அரசியல் – என மூன்று முனைகளைக் கொண்டுள்ளது.
காவிரி பிரச்சனையில் தமிழகம் பயந்தது நடந்து விட்டது. கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தள்ளி போட்டுள்ளது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. கர்நாடக மாநிலத் தேர்தல் முடிந்த பிறகும்கூட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அமைக்கப் போவதில்லை. ஏனெனில் அவர்களது நோக்கம் கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுயச்சார்பை அழித்து அதைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதே ஆகும்.
காவிரி பிரச்சனை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பை மேலோட்டமாக வாசித்தால்கூட புரிந்துகொள்ளமுடியும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட அளவில் இருந்து 14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்து அதை, கர்நாடக மாநிலத்தின் கணக்கில் உச்சநீதிமன்றம் சேர்த்தது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி 10 டி.எம்.சி. நீரை உச்சநீதிமன்றம் குறைத்தது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நிலத்தடி நீரை ஆய்வு செய்யவோ, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவோ உச்சநீதிமன்றம் அக்கறை காட்டவில்லை. அதை அந்தத் தீர்ப்பிலேயே ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். பெங்களூரு நகரத்திற்கு குடி தண்ணீர் தேவைக்கென 4.75 டி.எம்.சி. தண்ணீரை ஒதுக்கி உள்ளது உச்சநீதிமன்றம். சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து குழாய்மூலமாகக் காவிரி நீர்தான் கொண்டுசெல்லப்படுகிறது. அதை விசாரணையின்போது எடுத்துக்கூறியும்கூட சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையையோ, காவிரித் தண்ணீரை நம்பியிருக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர்த் தேவையையோ உச்சநீதிமன்றம் பொருட்படுத்தவில்லை. தமிழகத்தின் கணக்கில் இருந்து 14.75 டி.எம்.சி.தண்ணீரைக் குறைப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ள தர்க்கம் என்பது கொஞ்சமும் ஏற்கத்தக்கதாக இல்லை. இயற்கை நீதிக்கும் அதுஉடன்பாடானதாக இல்லை.
காவிரி பிரச்சனை தொடர்பான விசாரணையின் போது மத்திய அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் தமிழகத்துக்கு
பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது. இந்தப் பிரச்சனையில் எந்த மாநிலத்துக்கும் சார்பின்றி பொதுவாக நடந்து கொள்ள வேண்டுமென்று அதிகார வர்க்கம் நினைத்திருந்தால், அதற்கேற்ப நீதிமன்றத்துக்கு அவர்கள் தகவல்களை வழங்கியிருப்பார்கள். மாறாக, தமிழகத்துக்குப் பாதகமான முறையிலேயே அவர்களது அணுகுமுறை இருந்து வந்தது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும்கூட அதை செயல்படுத்துவதற்குப் பல்வேறு தடைகளை மத்தியிலுள்ள அதிகார வர்க்கம் தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ’ஸ்கீம்’ என்பதற்கு மத்திய அரசின் விருப்பம்போல ஏதோ ஒரு அமைப்பை உருவாக்கிக்கொள்ளலாம் என்பதுதான் பொருள்; மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என்பது போன்ற வாதங்களை மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு அதிகார வர்த்தகத்தினரே அளித்து வருகின்றனர். ’ஸ்கீமை’ உருவாக்குவதில் மத்திய அரசுக்கு சுதந்திரம் உள்ளது’என்ற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் தெளிவாக மறுத்துவிட்டது. ஸ்கீம் உருவாக்குவதென்பதே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதை செயல்படுத்துவதற்குத்தான் எனவும் கூறிவிட்டது. ( பக்கம் 463, பிரிவு XIX )
1956 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 6 A ன் படி உருவாக்கப்படும் ஸ்கீமானது மாதம் தோறும் வழங்கவேண்டிய நீரின் அளவு குறித்த
நடுவர் மன்றத்தின் பரிந்துரைகளையும் / உத்தரவுகளையும் வழிமொழிகிறது. அது 15 ஆண்டுகளுக்குத் தொடரும்” எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ( பக்கம் 464 பிரிவு XX ) உச்சநீதிமன்றம் அவ்வாறு தெளிவுபடுத்திய பிறகும்கூட மத்திய அரசின் அதிகாரிகள், அதிலும் குறிப்பாக நீர்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான விதத்திலேயே பேசி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக இல்லை என குழப்பம் ஏற்படுத்துகின்றனர். அதிகார வர்க்கம் தமிழகத்துக்கு இழைத்துள்ள துரோகம் என்றே இதைக் கருத வேண்டியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் வஞ்சிப்பது மத்திய அரசின் நிர்வாகம் சார்ந்த முடிவு அல்ல. உதாரணத்துக்கு சொன்னால், வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை தொடர்பான முடிவுகள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியின் விருப்பத்தைக் கடந்து எடுக்கப்படுபவை. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதாலேயே பாதுகாப்புத் துறை சார்ந்த அணுகுமுறையையும், வெளியுறவுத்துறை சார்ந்த அணுகு முறையையும் எளிதில் மாற்றிவிட முடியாது. ஆனால், காவிரிப் பிரச்சனை அத்தகையது அல்ல. இதில் மத்திய அரசு எடுக்கும் முடிவு என்பது, மத்தியில் ஆட்சியை கையில் வைத்திருக்கும் பா.ஜ.க. எடுக்கும் முடிவாகவே உள்ளது. இந்த முடிவு மத்திய அரசுக்கு லாபம் சேர்ப்பதற்கான ஒன்று அல்ல. மாறாக, பா.ஜ.க.வுக்கு அரசியல் லாபம் அளிப்பதற்கான ஒன்றாகும்.
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காகப் பல்வேறுவிதமான தந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது. சினிமா நட்சத்திரங்களை அரசியலில் இறக்கிவிடுவது, ஆளும் தரப்பினரை மிரட்டித் தமது பிடிக்குள் வைத்துக்கொண்டு மறைமுக ஆட்சி
நடத்துவது என்பவற்றோடு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து இதை ஒரு கலவர பூமியாக மாற்றுவதன்மூலம் தமிழக மக்களின்
அரசியல் உறுதியைக் ( Political will ) குலைப்பதென்பதும் பாஜகவின் நோக்கமாக உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீர்குலைத்து இம் மாநிலத்தின் தற்சார்பை ஒழித்தால்தான் தமிழக மக்களின் அரசியல் உறுதியை அழிக்க முடியும் என பாஜக கருதுகிறது. அதனால் தான், கூடங்குளத்தில் அணுமின் உலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன; டெல்டா மாவட்டங்களை முற்றாக பாலைவனமாக்கும் நோக்கில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன; தமிழ்நாட்டுக்குத் தொடர்பே இல்லாத கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாழடிக்கப்படுகின்றன; நியூட்ரினோ ஆய்வகம் தேவையில்லை என்று கூக்குரல் எழுப்பியும் அது தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகிறது.
தமிழக அரசு எவ்வளவுதான் கெஞ்சினாலும் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படுவதில்லை.பேரிடர் பாதிப்பின்போதும் கூட போதுமான நிவாரணத் தொகையை பா.ஜ.க. அரசு வழங்கவில்லை. 14 ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்த நிதியைக்கூடகொடுக்காமல் அதிலும், ஏறத்தாழ 9 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு கேடுபயக்கும் திட்டங்களைத் தமிழ்நாட்டின் மீது பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே திணித்து வருவதைப் பார்க்கும்போது, அப்படி திணிக்கப்படும் திட்டங்களை எதிர்த்து இங்கே மக்கள் போராட்டங்கள் எழும், அதை சாக்காக வைத்து தமிழ்நாட்டை ராணுவமயப்படுத்தலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருக்குமோ ; தமிழ்நாட்டை கலவர பூமியாக ஆக்கி இந்தியாவின் தென் கோடியில் இன்னொரு காஷ்மீரை உருவாக்கிட பாஜக திட்டம் தீட்டுகிறதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.
காவிரிப் பிரச்சனையில் இழைக்கப்பட்டுள்ள துரோகத்தின் மூன்று முனைகளையும் எதிர்த்துத் தமிழகம் களம் காண வேண்டும். இந்தப்
பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படுவதென்பது டெல்டா மாவட்டங்களின் விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயம்
மட்டுமல்ல, அது, தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்ததாகும்.பாஜக அரசால் பறிக்கப்படும் காவிரி உரிமையை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதன் மூலமோ, சட்டமன்ற தீர்மானங்களின் மூலமோ, சாத்வீகமான உண்ணாவிரதப் போராட்டங்களின் மூலமோ மீட்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருப்பதை அறிந்து மக்கள் வெகுண்டு நிற்கிறார்கள். அவர்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமான போராட்ட வடிவங்களே இன்றைய தேவை. தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்கும் விதமாக மாநிலந் தழுவிய முழு அடைப்பை அறிவிப்பது அதன் துவக்கமாக இருக்கலாம்.