[X] Close

5 அடி ஆழ ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் மிதந்தது எப்படி..?: கொலையா..?

5-tamilans-dead-in-Andra-Pradesh

ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தால், அவர்களின் சொந்த ஊர் மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனிடையே 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட ஏரி சுமார் 5 அடி ஆழமே உடையது என்பதால், அவர்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அடியனூர், கெரங்காடு கிராமங்களைச் சேர்ந்த 70 பேர் ஆந்திராவுக்கு வேலைக்கு சென்றிருந்தனர். குடும்பத்தினரிடம் மைசூருக்கு மிளகாய் பறிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர்களில், 5 பேர் ஆந்திரா மாநிலம் ஒண்டிமிட்டா ஏரியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் முருகேசன், ஜெயராஜ், கருப்பண்ணன், மற்றொரு முருகேசன் மற்றும் சின்னபையன் என தெரியவந்துள்ளது.


Advertisement

இதனால், அடியனூர் மற்றும் கெரங்காடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இடைத்தரகர்கள் ஆசை காட்டி வேலைக்கு அழைத்துச் செல்வதாகவும், ஆனால் பணிக்கு செல்லுமிடத்தில் தங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்றும் ஊர் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஏரியில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலையில் இருந்து ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் கியூ பிரிவு போலீசார் கடப்பா சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட ஏரி சுமார் 5 அடி ஆழமே உடையது என்பதால், ஐந்து பேரும் நீரில் மூழ்கியிருக்க வாய்ப்பு இல்லை என மனித உரிமைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர். உள்ளூர் செம்மரக் கடத்தல்காரர்களுக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், என்கவுண்டர் செய்தால் பிரச்னை என்பதால் இவர்களை கைது செய்த காவல்துறையினரே அடித்து கொன்றிருக்கலாம் என்றும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close