Published : 04,Mar 2017 11:19 AM
உயரப் போகிறது டீ, காபி விலை.....

தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் வரை பால் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதால் டீ, காபி விலை உயர வாய்ப்புள்ளது.
பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு எனும் காரணத்தைக் காட்டி, ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ் உள்ளிட்ட முன்னணி பால் நிறுவனங்கள், நாளை நள்ளிரவு முதல் பால் விற்பனை விலையை உயர்த்தப் போவதாக பால் முகவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையும், தயிருக்கான விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்போவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலை உயரும் அபாயம் இருப்பதாகவும், இந்த பால் விலை உயர்வைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.