Published : 07,Feb 2018 10:49 AM
நாடாளுமன்றமா? அரசியல் கூட்டமா?: மோடிக்கு ராகுல் பதிலடி

பொதுக்கூட்டத்தில் பேச வேண்டியவற்றை, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகிறார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். பட்ஜெட் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை பற்றியும் அவர் பேசினார். முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோடியின் பேச்சில் கடுமை தெரிந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பதிலில் புதிதாக எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பிரதமரின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, பிரதமரிடமிருந்து மக்கள் எதிர்பார்த்தது வேலைவாய்ப்புகளைத்தானே தவிர வெற்று உரைகளை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் விவசாயிகளின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யவில்லை என விமர்சித்துள்ள கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படத்தன்மையும் இல்லை என குற்றம்சாட்டினார். நாட்டின் எதிர்காலத்தை குறித்து பிரதமர் எந்தக் கவலையும் கொள்ளவில்லை என்றும், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டியதை பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.