Published : 27,Feb 2017 02:41 PM
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்: பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், வறட்சி நிவாரணம், மீனவர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்றபின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, முதலமைச்சருடன் தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.17,333 கோடியை விடுவிக்க வேண்டும், வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ. 27,000 கோடி வழங்க வேண்டும், மீனவர்களுக்கு சிறப்பு திட்டத்துக்காக 1,650 கோடி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார். நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவிரி, மேகதாது அணை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக முதலவர் கூறினார்.
இலங்கை தமிழர்கள், சிங்களவர்களுக்கு இணையாக வாழ அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் அங்கு உள்ள தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், உணவு பாதுகாப்பு திட்டத்தில் கூடுதலாக 85,000 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாக முதலமைச்சர் கூறினார்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய அமைச்சர் பி.யூஸ் கோயல் உள்ளிட்டோரையும் நாளை சந்தித்து பேச உள்ளார்