Published : 08,Nov 2017 02:31 PM
பணமதிப்பிழப்பால் சிறு தொழில்கள் நலிவடைந்தன: மு.க.ஸ்டாலின்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் சிறு-குறு தொழில்கள் நலிவடைந்தன என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களைத் தவிர தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்து ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், முறையாகத் திட்டமிடாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறு-குறு தொழில்களும் நலிவடைந்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட இந்த நாள், வேதனையான தினம் என்று அவர் விமர்சித்தார். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்நது எதிர்ப்போம் என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.
இதேபோன்று கோவை, சேலம், திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. உரிய முன்னேற்பாடுகள் இன்றி நடைபெற்ற பண மதிப்புநீக்க நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.