Published : 03,Nov 2017 02:54 PM
என் ரத்தம் உறிஞ்சப்படுகிறது: விழித்திரு இயக்குநரின் கதறல்

என் ரத்தம் உறிஞ்சப்படுகிறது என்று சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை விழித்திரு இயக்குநர் மீராகதிரவன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் வெளியீடு சில வருடங்கள் முன்பாகவே நடந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் அதன் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் அதன் ஊடக சந்திப்பு நடந்தது. அதில் பங்கேற்ற டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகா தனது பெயரை மேடையில் குறிப்பிடாமல் விட்டதற்காக காய்ச்சி எடுத்திருந்தார். அதன் வீடியோ வெளியாகி வைரல் ஆனது. தன்ஷிகா ஆர்மியே புரப்பட்டது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் இன்று சமூக வலைதளத்தில் “கடந்த இரண்டு நாட்களாக நெடிய உறக்கம் இல்லை. தற்போதும் ஜெமினி லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கி கொண்டிருக்கிறேன். துரோகத்தின் வல்லமையால் முழுவதும் சாகடிக்கப்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன். ஆனாலும் என் படத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. முழுவதுமாக கொல்லப்பட்டிருக்கிறேன். நான் மீண்டும் உயிர்ப்பித்து வருவது நீங்கள் அளிக்கப்போகும் ஆதரவில் இருக்கிறது. நண்பர்களும் மக்களும் ஊடகத்துறையினரும் எங்களைக் கைவிடமாட்டார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.சிரமங்களுக்கு மன்னிக்கவும். விழித்திரு திரையரங்குகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.ஆதரியுங்கள்.”என கருத்திட்டு உள்ளார்.
அந்தக் கருத்தை ரீ ட்விட் செய்து இயக்குநர் பா.ரஞ்சித் “பெரும் வலி மறைந்து வெற்றி மகிழ வாழ்த்துகள் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களுக்கு.”என்று கூறியிருந்தார். அதற்கு நடிகை சாய் தன்ஷிகா “ஒரு இயக்குநரின் வலியை புரிந்து வாழ்த்தியதற்கு நன்றி” என கூறியிருக்கிறார்.