Published : 25,Oct 2017 07:32 AM
தற்கொலைக்கு எதிராக பைக்கில் பிரச்சாரம் செய்த பெண் சாதனையாளர் விபத்தில் மரணம்

இந்தியாவையே பைக்கில் வலம் வந்து, தற்கொலைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த பெண் சாதனையாளர் சனா இக்பால் கார் விபத்தில் உயிரிழந்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சனா இக்பால். இவர் நாடு முழுவதும் தற்கொலைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். குறிப்பாக மாணவர்கள் மற்றும் பெண்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு தன்னபிக்கை பயிற்சியாளராக திகழ்ந்தார். இதற்காக சனா, நாடு முழுவதும் மோட்டர் சைக்கிளில் பயணித்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று தனது கணவர் அப்துல் நதீம் உடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஹைதராபாத்தின் நரசிங்கி என்ற பகுதியில் இவர்கள் சென்ற கார், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சனா இக்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது கணவர் அப்துல் நதீம் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நதீமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனாவின் தாய் இந்த விபத்து கொலை என்றும், இது விபத்து போல் ஜோடிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சனாவின் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னைகள் இருந்ததாகவும், இதுகுறித்து போலீசார் உடனடி விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்கொலைக்கு எதிராக தனியொரு பெண்ணாக நின்று பிரச்சாரம் செய்து வந்த சனா இக்பால் மரணம் அந்த பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.