
புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாதுகாக்க வலியுறுத்தியும் நிலுவை தொகை வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டிபிஆர் செல்வம் தலைமையில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முழக்கமிட்டு சர்க்கரை ஆலைக்குள் நுழைய முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
அதில் எம்.எல்.ஏ செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்த போலீஸார் அவர்களை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனர். அதனை எதிர்த்து ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.