
தமிழகத்தில் இன்று டெங்கு மற்றும் காய்ச்சால் காரணமாக 10 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு மூவர் உயிரிழந்தனர். அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கிளாடின் சோபியா, 10 வயது சிறுவன் பாலமுருகன், 10 மாத குழந்தை ஹாஜிரா பீவி ஆகியோர் உயிரிழந்தார். அதேபோல, திருவண்ணாமலை அடுத்த சின்னகல்லப்பாடியில் 4 வயது குழந்தை லீனா உயிரிழந்தது. குழந்தை லீனாவின் சகோதரி ஹரிணிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல, மதுரை பாலமேட்டில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முருகன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த கருப்பன் என்பவரின் மனைவி சாந்தி மற்றும் கோத்தகிரி எஸ். கைகாட்டி பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவரின் மகன் கார்த்திக் ஆகிய இருவரும், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் உள்ள காலநிலைக்கு டெங்கு கொசுக்கள் வளர வாய்ப்பில்லை என்று கூறிவந்த நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு உண்டான அறிகுறிகள் இருந்திருப்பது இப்பகுதி பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.