Published : 27,Feb 2023 01:06 PM
'எனக்கு 52 வயதாகிறது; இன்னும் சொந்த வீடு இல்லை' - ராகுல் காந்தி உருக்கம்

‘எனக்கு இப்போது 52 வயது ஆகிறது; ஆனால், சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது’ என்று ராகுல் காந்தி மிகவும் உருக்கமாகப் பேசினாா்.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு, சத்தீஸ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் மாநாட்டின் இரண்டாவது நாளில் சோனியா காந்தி பங்கேற்று பேசினார். மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பாரத் ஜோடோ யாத்திரை முதல் பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி பேசினார். குறிப்பாக 1977 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினர் அரசு இல்லத்தை காலி செய்ய தயாராகி வந்த நிகழ்வும் குறித்தும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், ''எங்கள் வீட்டில் அப்போது ஒரு வித்தியாசமான சூழல் நிலவியது. நான் எனது அம்மாவிடம் (சோனியா காந்தி) சென்று என்ன நடந்தது என்று கேட்டேன். வீட்டில் இருந்து வெளியேற போகிறோம் என்று அம்மா கூறினார். அப்போது வரை நாங்கள் இருந்த வீடு எங்களின் சொந்த வீடு என்றே நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். எனவே, எனது அம்மாவிடம் ஏன் வீட்டை காலி செய்கிறோம் என்று கேட்டேன். அப்போதுதான் முதல் முறையாக இது நமக்கு சொந்தமான வீடு கிடையாது. அரசு வீடு என்று அம்மா கூறினார்.
மேலும் வீட்டில் இருந்து வெளியேறியாக வேண்டும் என்றார். நான் உடனே அடுத்து எங்கே போகப்போகிறோம் என்று கேட்டேன். தெரியவில்லை என்று அம்மா கூறினார். நான் சற்று திடுக்கிட்டேன். 52 ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னமும் சொந்தமாக வீடு கிடையாது. எங்களின் குடும்ப வீடு அலகாபாத்தில் உள்ளது. அதுவும் கூட எங்களுக்கு சொந்தமானது இல்லை. 12, துக்ளக் லேன் வீட்டில் வசித்து வருகிறோம். ஆனால், அதுவும் என்னுடைய வீடு கிடையாது.
நான் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கியபோது, என்னைச் சுற்றி இருக்கும் 20 முதல் 25 அடி பரப்பளவு மட்டுமே அடுத்த சில மாதங்களுக்கு எனது சொந்த வீடாக இருக்கப் போகிறது என்று உறுதி செய்து கொண்டேன். அந்த வீட்டுக்குள் ஏழை-பணக்காரா், இளைஞா்- முதியவா், பல்வேறு மதம், ஜாதி, இனத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும் சரி அவா்கள் வீடாக உணர வேண்டும் என்றே கருதினேன். அப்போது முதல் எனது நடைப்பயணத்தின் நோக்கம் மேலும் உயா்ந்தது'' என்றாா்.