Published : 12,Feb 2023 01:24 PM

பிரட் பாக்கெட்டில் நெளிந்த எலி.. அதிர்ந்துப்போன கஸ்டமர்! blinkitஐ வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

A-man-found-a-live-rat-inside-a-bread-packet-which-is-ordered-from-blinkit

காய்கறிகள், மளிகை சாமான்கள், உணவு பொருட்கள், உணவுகள், துணிகள், எலக்ட்ரானிக்ஸ் என அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே சுலபமாக வாங்கிக்கொள்ளும் வகையில் மக்களின் வேலைகளை ஆன்லைன் செயலிகள் பலவும் சுலபமாக்கியிருக்கின்றன.

இதனால் வெளியே செல்லும் வேலையும் நேரமும் மிச்சமாவதால் உலகம் முழுக்க இருக்கும் பெருவாரியான மக்கள் இ-காமர்ஸ் தளங்களையே நம்பி தினசரி தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். வேலையை எளிதாக்கினாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் தரமற்றதாகவோ, விலை அதிகமானதாகவோ இருக்கும்.

அதிலும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்யும் போது குறிப்பிட்ட நிறுவனங்கள் நிமிடங்களில் டெலிவரி செய்வதாகச் சொல்லி காலாவதியான பொருட்களை அனுப்பவது, தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செயல்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதுபற்றி அதிகபடியான புகார்கள் எழுந்த போதும் தொடர்ந்து குளறுபடிகள் நடந்தே வருகின்றன.

அப்படி, நிதின் அரோரா என்பவர் Blinkit தளத்தில் தான் ஆர்டர் செய்த பிரட் பாக்கெட்டிற்குள் உயிருடன் எலி நெளிந்துக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து புகார் தெரிவித்திருக்கிறார்கள். அதில், “ப்ளின்கிட் சேவையில் மிகவும் விரும்பத்தகாத அனுபவம் கிடைத்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆர்டர் செய்த பிரட் பாக்கெட்டில் உயிரோடு இருக்கும் எலி இருந்திருக்கிறது. இது நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணியென்றே நினைக்கவேண்டியுள்ளது.

10 நிமிடங்களில் டெலிவரி செய்வதில் இத்தனை குளறுபடிகளும், பொறுப்பின்மையும் இருந்தால், நான் மணிக்கணக்கில் வரிசையில் நின்றே வாங்கிக்கொள்கிறேன்” என காட்டமாக பதிவிட்டுள்ளதோடு, பிளின்கிட் கஸ்டமர் கேரில் புகார் தெரிவித்ததையும் அதனூடே பகிர்ந்திருக்கிறார் அவர்.

நிதின் அரோராவின் இந்த பதிவை கண்ட பிளின்கிட் நிறுவனம், “இதுப்போன்ற மோசமான அனுபவத்தை நீங்கள் பெறவேண்டுமென நாங்கள் நினைத்ததில்லை. உங்களுடைய விவரங்களை தெரிவியுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறது.

நிதினின் இந்த பதிவு வைரலாகவே பல இணையவாசிகளும் பிளின்கிட்டின் தரமற்ற சேவையால் தங்களது நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். அதில் அர்ஜூன் என்பவர், “இது மாதிரியான சம்பவம் எனக்கும் நடந்திருக்கிறது. பிளின்கிட்டில் ஆர்டர் செய்தபோது அழுகிப்போன பொருட்களே எனக்கு கிடைத்தது. புகார் கூறியபோது பிளின்கிட்டில் இருந்து எந்த சப்போர்ட்டும் கிடைக்கவில்லை.

இதனால் பொருட்களை டெலிவரி செய்யும் இடத்துக்கே சென்று பார்த்த போதுதான் நிலவரம் தெரிந்தது. பாக்கெட்டுக்குள் எலி இருந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் குப்பையாகவும், பூச்சிகள் மொய்த்துக்கொண்டேவும் இருந்தன” என குறிப்பிட்டிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்