Published : 07,Feb 2023 04:34 PM

"மோடியின் வெளிநாட்டு பயணத்தில் அதானிக்கு கிடைத்த ஒப்பந்தங்கள் எத்தனை?” - ராகுலின் 5 கேள்வி

What-is-the-connection-between-Modi-and-Adhani---Rahul-s-question-in-Parliament

”பிரதமர் மோடிக்கும் தொழிலதிபர் அதானிக்கும் என்ன தொடர்பு” என நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி விவகாரம்; முடங்கிய நாடாளுமன்றம்!

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால், ஆசியாவிலேயே மிகப் பிரபலமான அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. உலக அளவில், அதானி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாய் வெடித்து வருகிறது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகின்றன. நேற்று (ஜனவரி 6) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பதிவாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்'' என குற்றஞ்சாட்டியிருந்தார்.

image

இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்றத்தில், மீண்டும் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து கோரிக்கை எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஒரு மணி நேர ஒத்திவைப்புக்கு பின்னர் மக்களவையில் அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. அப்போது பாஜக எம்.பி., சி.பி.ஜோஷி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சியினர் மீண்டும் நாடாளுமன்றத்தின் மையத்திற்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, மதியம் 1.30 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு?

இதனையடுத்து தொடங்கிய மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், "பாரத் ஜோடோ யாத்ராவின்போது நாங்கள் நாடெங்கிலும் உள்ள மக்களின் குரல்களைக் கேட்டோம், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினர். அவர்கள் வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர். அக்னிவீர் திட்டம், ராணுவத்தின் மீது திணிக்கப்படுவதாகவும், வேலையில் இருந்து பலர் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், பின்னர் மீண்டும் சமூகத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், இது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். அக்னிவீர் யோஜனா ஆர்.எஸ்.எஸ்., உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்தது என்றும் ராணுவத்தில் இருந்து அல்ல என்றும் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

image

அதானி என்கிற ஒற்றைப் பெயர்

ஜனாதிபதி உரையில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற வார்த்தைகள் இல்லை. நாடு முழுவதும் 'அதானி' என்ற ஒரு பெயரைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார். இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு தொழிலிலும் எப்படி வெற்றி பெறுகிறார். அதானி இப்போது 8-10 துறைகளில் இருக்கிறார் என்றும், 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்றும் இளைஞர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.

அதானிக்காக விதிமுறைகள் மாற்றம்

பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானிக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் முதல் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நாம் நடந்து செல்லும் சாலைகள் வரை அதானி விவகாரம் மட்டுமே பேசப்படுகிறது. வெவ்வேறு துறைகளில் அதானி குழுமத்தை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. 2014ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, விமான நிலையங்களை மேம்படுத்தும் பொறுப்பை ஒரு நிறுவனம்/ஒரு நபருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, ஆறு விமான நிலையங்கள் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கோடீஸ்வரர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி, அதானி தொடர்பு குறித்து ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவை,

1. நீங்களும் (மோடி) அதானியும் சேர்ந்து எத்தனை முறை வெளிநாடு சென்றிருக்கிறீர்கள்?
2. உங்கள் (மோடி) வெளிநாட்டுப் பயணங்களில் அதானி வந்து பின்னர் இணைந்தது எத்தனை முறை?
3. உங்களின் வெளிநாட்டுப் பயணம் முடிந்தவுடனேயே, அந்த நாட்டுக்கு எத்தனை முறை சென்று அதானி ஒப்பந்தம் செய்துள்ளார்?
4. கடந்த 20 ஆண்டுகளில் பாஜகவுக்கு அதானி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு?

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்