Published : 30,Jan 2023 03:15 PM

‘தளபதி 67’ படத்தில் சிம்பு,ரக்ஷித் ஷெட்டி ?படத்தை இந்த தேதியில் வெளியிட படக்குழு திட்டம்?

Rakshit-Shetty-hints-that-he-s-not-a-part-of-Thalapathy-67-and-Vijay-s-Thalapathy-67-with-director-Lokesh-Kanagaraj-to-release-on-October-19

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் ‘தளபதி 67’ படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மனோபாலா, நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் கதையாகவும், லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கதையாகும் உருவாகி வருவதால், ஏராளமான நடிகர்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தாலும், இந்தப் படம் சம்பந்தமான புரோமோ அல்லது புகைப்படங்கள் என எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இதுதொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளை குறித்து வைத்துக்கொள்ளுமாறும், அது மட்டும் தான் தன்னால் சொல்ல முடியும் என்று கூறியிருந்தார்.

இதனால், இந்த தேதிகளில் படம் தொடர்பான புரோமோ எதும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதைவைத்து ‘தளபதி 67’ படத்தில் நடிகர் சிம்பு வில்லனாக நடிப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது. ஏனெனில் சிம்புவின் பிறந்தநாள் 3-ம் தேதி கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் ‘தளபதி 67’ படத்தில் சிம்பு அடங்கிய புரோமோ எதும் வெளியாகலாம் என்று தகவல் பரவி வருகிறது. அதனாலேயே லோகேஷ் ஹிண்ட் கொடுக்கும் வகையில் பேசியுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே ‘வாரிசு’ படத்தில் ‘தீ தளபதி’ பாடலை நடிகர் சிம்பு பாடியதுடன் பாடலில் சின்ன கேமியோ பண்ணியிருந்தார்.

அத்துடன், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னே டிஜிட்டல் தளம் மூலம் கல்லா கட்டிய நிலையில், அக்டோபர் மாதம் 23-ம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 24-ம் தேதி விஜயதசமி விடுமுறைகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் வருவதால், இதனை முன்னிட்டு அக்டோபர் 19-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்தப் படத்தில் மிஷ்கின் சம்பந்தப்பட்ட பகுதிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக காஷ்மீரில் சஞ்சய் தத் உடன் படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

image

இதற்கிடையில், இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரக்ஷித் ஷெட்டி நடிப்பதாக தகவல் பரவி வந்தநிலையில், மறைமுகமாக ‘தளபதி 67’ படத்தில் தான் இல்லை என்பதை ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “ ‘Sapta Sagaradaache Ello’(SSE) படத்துக்குப் பிறகு அடுத்தப் படங்கள் குறித்த தெளிவாக உள்ளன. அதாவது ‘Richard Anthony’(RA), ‘Punya Koti 1’ (PK 1), ‘Punya Koti 2’ (PK 2), ‘Midnight to Moksha’ (M2M) ஆகிய நான்கு படங்கள் மட்டுமே எனது வரிசையில், அதற்காக தூக்கத்தை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். Kirik Party 2 (KP 2) இப்போது இல்லை. எனினும், அது சம்பந்தமாக வேறு திட்டங்கள் உள்ளன. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. இதைத் தவிர இணையத்தில் நீங்கள் படிக்கும் எதுவும் உண்மையல்ல. உண்மையாகவும் இருந்ததில்லை... அன்புடன்” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம், ‘தளபதி 67’ படத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிக்கவில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்