Published : 22,Jan 2023 05:03 PM
”வேகம் முக்கியம்.... ஆனா” - புது கார் வாங்கிய முகம்மது ஷமிக்கு ஆலோசனை வழங்கிய ரசிகர்கள்!

புதிய கார் வாங்கியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கும் நெட்டிசன்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கான 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் மொத்தம் 5 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். அதுபோல் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டியில் 6 ஓவர்கள் வீசி 18 ரன்களை வழங்கி, 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இவருடைய அற்புதமான பந்துவீச்சால், நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது.
தவிர, இந்தப் போட்டியிலும் தோல்வியுற்றதால் தொடரையும் இழந்தது. இந்தப் போட்டியில் முகம்மது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையடுத்து அவருடைய பந்துவீச்சின் திறமைக்கு கிரிக்கெட் வல்லுநர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தான் வாங்கியிருக்கும் புதிய காரை தன்னுடைய வலைத்தள பக்கமான ட்விட்டரில் முகம்மது ஷமி பகிர்ந்து, "உண்மையில் வேகம் முக்கியம் (Ofcourse speed matters)" என்ற பதிவையும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் அவருடைய வேகம் சம்பந்தமான பதிவுக்குக் கருத்திட்டும் வருகின்றனர்.
Ofcourse speed matters #mdshami11#mdshami#speedster#petrolheadpic.twitter.com/5WRwi7Jfz3
— Mohammad Shami (@MdShami11) January 22, 2023
அதில் சிலர், ‘காரை ஓட்டி விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் நிலையை நினைத்துப் பாருங்கள்’ என்றும், ’நீங்கள் காரை ஓட்ட வேண்டாம்’ என்றும் ‘காரை பாதுகாப்பாக ஓட்டுங்கள்’ என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 30ஆம் தேதி, இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட், தன் காரை வேகமாய் ஓட்டிச் சென்று உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே விபத்தில் சிக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர், தற்போது மும்பை மருத்துவமனையில் தங்கி மேல்சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது நெட்டிசன்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் இதேபோன்ற அறிவுரையை அவருக்கும் வழங்கியிருந்தனர். ’காரை வேகமாக ஓட்டிச் செல்ல வேண்டாம்; நீங்கள் ஒரு டிரைவரை வைத்துக்கொள்ளுங்கள்’ எனப் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.