Published : 27,Nov 2022 11:06 AM

"மனிதன் வழிப்பட்ட சுவாமி சிலையை கல் என உணர வைத்தது திராவிட இயக்கம்தான்" - கனிமொழி

MP-Kanimozhi-says-central-government-has-not-accepted-Tamil-even-as-a-court-language

“தமிழ்மொழியை மத்திய அரசு அங்கிகரிக்கவில்லை. சமமாக நடத்தவில்லை. கீழடி ஆய்விற்கு போதிய நிதி தரவில்லை. மொழி குறித்து  சிறப்பாக பேசுகின்றனர். ஆனால் வளர்ச்சிக்கு உதவவில்லை யாரும். நீதிமன்ற மொழியாக கூட தமிழை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மொழியை, தமிழ் இலக்கியத்தை, சுயமரியாதையை காப்பாற்றி நம்முடைய பெருமையை புரிந்து கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்” என நெல்லையில் நடைபெற்ற பொருநை இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்ட கனிமொழி பேசியுள்ளார்.

திருநெல்வேலியில் தமிழக அரசின் சார்பில் இலக்கிய திருவிழா நேற்று காலை துவங்கி 5 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 169 எழுத்தாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரதான அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு `நெல்லை நீர் வளத்தை  எப்படி சிறப்பாக கையாள்வது’ என்பது குறித்த ஆட்சியரின் கேள்விக்கு மாணவ மாணவிகள் எழுதிய 1800 கடிதங்கள் அடங்கிய இலக்கிய தொகுப்பை வெளியிட்டார். அதனை எழுத்தாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

image

தொடர்ந்து மேடையில் எம்.பி கனிமொழி பேசினார். அவர் பேசுகையில், “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. பெரு நகரங்களில் மட்டுமே புத்தக திருவிழா என்ற நிலை மாறி, சிறிய நகரங்களிலும் ஒவ்வொருவரின் கைகளுக்கும் புத்தகங்கள் கிடைக்கும் அளவிற்கு புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. கேரளாவில் இலக்கியத்தை பற்றியும் அதன்  எழுத்தாளர்கள் பற்றி சாதாரண மக்கள் கூட அதிகம் தெரிந்து வைத்திருப்பார்கள். தமிழ்நாட்டில் இலக்கியத்தைக் அந்த அளவிற்கு  கொண்டாடுவதில்லை. இந்த இலக்கியவிழா போன்ற  திருவிழாக்கள் அதை மாற்றிக் காட்டும் விழாவாக இருக்கிறது.

image

நம்மீது வழக்கு பதிவு இல்லை என்றால் அது புத்தகங்களை வாசிப்பதில் மட்டும்தான். வாழ்வில் புத்தக வாசிப்பு மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கலைஞர் எனக்கு புத்தக வாசிப்பை ஊக்குவித்தார். திராவிட இயக்க தலைவர்கள் தொடர்ந்து புத்தகம் வாசிக்க கூடியவர்கள். எழுதக்கூடியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அண்ணா, கலைஞர், சம்பத் போன்றவர்கள் இதற்கு உதாரணம். திராவிடம் என்பது ஆராய்ச்சி செய்து அரசியல் செய்யக்கூடிய ஒன்று என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கும் திராவிட மொழிகளுக்கும் எந்த தொடர்பும் இல்ல. அது வெவ்வேறு இடங்களில் உதயமானவை என்று ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் சொல்லி இருக்கிறார்.

image

மனிதன் தான் வழிபடட்ட சுவாமி சிலையை கல் என்றும், தான் மனிதன் என்றும் உணர வைத்தது திராவிட இயக்க எழுத்துக்கள். நிகழ்காலத்தை தாண்டி முன்பே பெண் விடுதலை குறித்து தைரியமாக பேசிய இயக்கம் திராவிட இயக்கம். பெண் விடுதலையை திரைப்படத்திலும் தைரியமாக சொன்ன இயக்கம் திராவிட இயக்கம். 23 ஆண்டுகள் ராமனோடு வாழ்ந்த காலத்திற்கு பிறகே, ராவணவன் சீதையை தூக்கி சென்றான். சீதையை மீட்ட பிறகு சீதை மீது நம்பிக்கையின்றி ராமன் சீதையை தீயில் இறங்க சொன்னது ஏன் என்ற கேள்வி என்னில் எழுகிறது. ராவணன் தூக்கி சென்ற பிறகு, ராமன் சீதையின் காதலால் உருகியது சரி. ஆனால் மனைவி மீது நம்பிக்கை இல்லையே ஏன்?” என்றார்.

தொடர்ந்து மத்திய அரசு குறித்து பேசுகையில், “தமிழ்மொழியை மத்திய அரசு அங்கிகரிக்கவில்லை. சமமாக நடத்தவில்லை. கீழடி ஆய்விற்கு நிதி தரவில்லை. மொழி குறித்து சிறப்பாக பேசுகின்றனர். ஆனால் வளர்ச்சிக்கு உதவவில்லை. நீதிமன்ற மொழியாக கூட தமிழை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மொழியை தமிழ் இலக்கியத்தை சுயமரியாதையை காப்பாற்றி நம்முடைய பெருமையை புரிந்து கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவேண்டும்.

முன்னதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை மேற்கு நுழைவு  வாயிலை பார்வையிட்டார்  அங்கு கைவினை பொருட்கள் கண்காட்சி விற்பனையையும் தொடங்கி வைத்தார்” என்றார். இந்த நிகழ்வுகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்