Published : 01,Nov 2022 11:06 PM

வெளியேறியது ஆப்கன்.. நியூசிலாந்தை தட்டி தூக்கிய இங். - புள்ளிப்பட்டியலில் என்ன மாற்றம்?

T20-WC-2022-Srilanka-beat-afghan-and-England-team-beats-NZ

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சூப்பர் 12 ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. குரூப் 1-ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், குரூப் 2-ல் தென்னாப்ரிக்கா, இந்தியா, பங்களாதேஷ், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு குரூப்-களிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆறு அணிகளில் 2 அணிகள்தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதால் அணிகளிடையே போட்டி கடுமையானதாக இருக்கும். குரூப் ஒன்றில் தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2-ல் தென்னாப்ரிக்கா, இந்தியா அணிகளும் முன்னிலையில் இருக்கின்றன. அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளை பொறுத்து இதில் மாற்றங்கள் இருக்கும்.

இனி இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகள் குறித்து பார்க்கலாம். முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இலங்கை - ஆப்கான்:

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. ஆப்கான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பஸ், உஸ்மான் கானி ஆகியோர் தலா 28, 27 ரன்கள் எடுத்தனர். 42 ரன்களுக்கு தான் முதல் விக்கெட் வீழ்ந்தது. அதன் பிறகு வந்த யாரும் இந்த ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. இருப்பினும் சீரான இடைவெளியில் ரன் உயர்ந்து வந்தது. இப்ராஹிம் ஜத்ரான் 22, நஜிபுல்லா ஜத்ரான் 18, குல்பதின் நெய்ப் 12, முகமது நபி 13, ரஷித் கான் 9 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியில் ஹசரங்க டி செல்வா 4 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். லஹிரு குமாரா 2 விக்கெட் எடுத்தார்.

145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா(10), குசல் மெண்டீஸ்(25) சொதப்பினாலும் தனஞ்ஜெயா சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். சரித் அசலங்கா 19, பனுகா ராஜபக்ச 18 ரன்களில் ஆட்டமிழந்த போதும் தனஞ்ஜெயா 42 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். ஆப்கான் தரப்பில் ரஷித் கான், முஜீப் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் 3 விக்கெட் சாய்த்த ஹசரங்கா ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார்

நியூ. - இங்கிலாந்து:

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹால்ஸ் அரைசதம் விளாசினர். பட்லர் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரி உட்பட 73 ரன்கள் விளாசினார். 81 ரன்களில்தான் முதல் விக்கெட் வீழ்ந்தது. 12.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 100 ரன்களை எட்டியது. அதனால் நிச்சயம் 200 ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தொடக்க வீரர்களை தவிர்த்து மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மொயின் அலி 5, ஹேரி ப்ரூக் 7, பென் ஸ்டோக்ஸ் 8 என பலரும் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதனால், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் 40, டிம் சவுத்தி 43, பர்குஷன் 45 ரன்கள் வாரி வழங்கினர். ஸ்பின்னர்களான சாண்ட்னர், சோதி சிறப்பாக பந்துவீசினர். சோதி 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். சாண்டனர் 25 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான பின் அலென் 16, டெவின் கான்வே 3 தொடக்கத்திலேயே வெளியேறினர். இருப்பினும் கேப்டன் கேன் வில்லியன்ஸும், க்லென் பிலிப்பும் நிதானமாக விளையாடினர். பிலிப்ஸ் அதிரடிக்கு மாறிய போதும் இறுதிவரை வில்லியம்ஸ்சன் நிதானமாகவே விளையாடினார். ஒருவேளை அந்த அணியின் தோல்விக்கு அதுகூட காரணமாக இருந்திருக்கலாம். 15 ஓவரில் 40 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து முதலில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நீஷம் 6, மிட்செல் 3 ரன்களில் நடையைக் கட்டினர்.

அதிரடியாக விளையாடி வந்த பிலிப்ஸ் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் குவித்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. நியூசிலாந்து அணி வலுவாக இருப்பதால் அந்த அணியே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி தனது அசத்தலான ஆட்டத்தால் பட்டையை கிளப்பியது.

புள்ளிப்பட்டியல்:

இன்றைப் போட்டியில் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவுடன் சமநிலையில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் குரூப் 1-ல் இரண்டாம் இடம் பிடித்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இலங்கை அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தாலும் 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது தோல்வியை பதிவு செய்ததோடு கிட்டதட்ட அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. நாளை இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்