Published : 03,Aug 2022 04:45 PM

முதல்பட வெளியீட்டுக்கு முன்பே வெளியான அறிவிப்பு - சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி

Aditi-Shankar-auditioned-to-play-the-lead-in-Maaveeran

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகவுள்ள ‘மாவீரன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யோகி பாபு நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. ஒடுக்கப்பட்ட ஒருவரின் வாக்கு யாருக்கு என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தான் இயக்கிய முதல் படத்திலேயே மடோன் அஸ்வின், திரையுலகில் கவனித்தக்க இயக்குநராக மாறினார். சமீபத்தில் இந்தப் படத்திற்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதும் மடோன் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் தனது இரண்டாவது படத்திற்காக மடோன் அஸ்வின் இணைந்துள்ளார். ‘மாவீரன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தை தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவற்பைப் பெற்ற நிலையில், இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதையடுத்து படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்தவகையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்தியின் நடிப்பில், சூர்யாவின் 2டி எண்டெர்டெயிண்மெண்ட் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர். இந்தப் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை இசைமையப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடி பாடகியுகவும் அறிமுகமாகியுள்ளார் அதிதி ஷங்கர். இந்நிலையில், இந்தப் படம் ஆகஸ்ட் 12-ம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ‘மாவீரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அதிதி ஷங்கர். மேலும் பிரபல நடிகையான சரிதாவும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்