Published : 21,Jul 2022 09:12 PM

#பேசாதபேச்செல்லாம் - 4: வயதானவர்களின் காதல் வாழ்க்கையில் எழும் சிக்கல்கள்!

-PesathaPechellam---4--What-are-the-difficulties-in-elderly-romance-

’’காதலுக்கு கண்ணுமில்லை; வயது, பால் என்ற வித்தியாசமில்லை’’ என்று பலரும் காதல் வசனம் பேசக் கேட்டிருப்போம். காதல் இன்பமானதுதான். ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு மேல் மனம் இளமையாக இருந்தாலும், அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்த உடல் ஒத்துழைக்காது போகும். முதுமையில் இனிமைகாண, தம்பதியரிடையே போதுமான புரிதல் இருப்பதுடன் தாம்பத்தியமும் இருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் குடும்ப உறவுகளின் மத்தியில் அது என்னென்ன மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தும்? தாம்பத்தியத்தில் சரிவர ஈடுபட முடியாமல்போக காரணங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் உளவியலாளர் Dr.சுஜிதா.

image

பெரும்பாலும் 60 வயதுக்குக் கீழுள்ள கிட்டத்தட்ட 72% பேர் தாம்பத்தியத்தில் ஆர்வமுடன் இருக்கின்றனர். Geriatric period என்று சொல்லக்கூடிய வயதான காலத்தில் உடலுறவில் நாட்டமின்மை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.

பெண்கள் மெனோபாஸ் நிலையை அடையும்போது அவர்களுடைய உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. எலும்பு பிரச்னை, கால்சியம் குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களாலும் பெண்களுக்கு உடலுறவின்மீது நாட்டமின்மை ஏற்படலாம். மேலும் பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், உடலுறவு கொள்ளத்தூண்டும் திரவிய (Lubrication) சுரப்பு குறைதல் போன்றவை உடலுறவின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. ஆண்களுக்கு ருமாட்டிசம் என்று சொல்லக்கூடிய மூட்டுவலி, ஆர்த்ரிட்டிஸ் பிரச்னை போன்றவை ஏற்படுகிறது. இதனால் அவர்களால் உடலுறவின்போது விறைப்புத் தன்மை அடையக்கூடிய தன்மை இல்லாமல்போகிறது. இவை அனைத்தும் உடல்சார்ந்த பிரச்னைகளாக இருந்தாலும், 60 வயதை தாண்டும்போது physiological, pathological மற்றும் psychological பிரச்னைகள் அதிகமாக ஏற்படுகிறது.

image

உதாரணத்திற்கு ஒரு வண்டி வாங்கும்போது அதில் ஒரு என்ஜின் இருக்கும். அந்த என்ஜினிற்கு கியாரண்டி, வாரண்டி போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட வருடத்திற்கு அது ஓடும். அதுவரை அதற்கு ஆயில், பராமரிப்பு போன்றவை முறையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் என்ஜினின் செயல்பாடு குறைந்துவிடும். அதேபோலத்தான் நம் உடலும். 35 வயதிற்கு மேல் ஆக ஆக முறையான பராமரிப்பு இல்லாவிட்டால் எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகள் ஆரம்பித்து உடலின் செயல்பாடும் குறைந்துவிடும். இதனால் வயதானபிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடவே முடியாதா என்ற கேள்வி எழும். அது ஒவ்வொரு தம்பதியரையும், அவர்களுக்கிடையே உள்ள புரிதலையும் காதலையும் பொறுத்தது.

image

60 வயதாகும்போது பெரும்பாலான தம்பதியர் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நிலையில் இருப்பர். இதனால் இந்த வயதில் நமக்கு எதற்கு உடலுறவு? என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பர். மேலும், சிலர் வயதான காலத்தில் கர்ப்பமடைந்துவிட்டால் என்ன செய்வது? இந்த வயதில் குழந்தைப்பெறுவதற்கு உடல் ஒத்துழைக்காது, எனவே பாதுகாப்பான முறையில் உடலுறவில் ஈடுபடுவது எப்படி? என்பன போன்ற விழிப்புணர்வு இல்லாததால் பல கேள்விகளால் சூழப்பட்டிருப்பர். இதனாலும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பவரும் உண்டு. இதுபோன்ற எண்ணங்கள் மேலோங்கும்போது மனதளவில் ஒருவித அழுத்தம் ஏற்படும். இதனால் தம்பதியரிடையேயான பிணைப்புத்தன்மை குறைந்து சலிப்பு தட்டிவிடும்.

image

வயதானவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது அவர்களை மனதளவில் பாதிப்பதால், தம்பதியரிடையே பிரச்னை வருவது மட்டுமன்றி, மருமகள், மருமகன்கள் போன்ற உறவுகளிடையே விருப்பு வெறுப்புகளை காட்டுவர். இதனால் அதீத சண்டையும் இடுவர். மேலும், சில சமயங்களில் அந்த விரக்தியை பேரக்குழந்தைகளிடமும் காட்டும் பெரியோர்களும் உண்டு. ஒருவர் மேல் இருக்கும் கோபத்தை மற்றொருவர் மீது காட்டுவதை projection என்று சொல்லுவர். தனது கணவனோ மனைவியோ தன்னுடைய உடல் தேவைகளை பூர்த்தி செய்யாதபோது அந்த கோபம் வேறு நபர்மீது திணிக்கப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும். எனவே வயதானாலும் அன்பும் அரவணைப்பும் குறையாமல் இருந்து, ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட்டால் முதிர்வயதிலும் மகிழ்ச்சியாக வாழலாம். குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம்.

காமம் சார்ந்த சந்தேகங்களுக்கு மருத்துவர் மற்றும் நிபுணர்களிடம் பேசி அவர்கள் தரும் பதிலை உங்களுக்குத் தந்துகொண்டிருக்கிறோம். உங்கள் சந்தேகங்களை கமெண்ட்டில் கேளுங்கள்.

#பேசாதபேச்செல்லாம் - 3: தாம்பத்திய உறவில் ஆர்வமின்மை ஏற்படுவது ஏன்? 

#பேசாதபேச்செல்லாம் - 2: குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடும் முடிவு...  வழிகள் என்னென்ன? 

#பேசாதபேச்செல்லாம் - 1 : இணையருடன் காமம் கொள்ள சரியான நேரம் பகலா இரவா?-மருத்துவர் விளக்கம் 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்