Published : 19,Jul 2022 12:55 PM

`தேசிய வேலைவாய்ப்பு கொள்கை இப்போதைக்கு இல்லை’- கூட்டத்தொடரில் மத்திய அரசு திட்டவட்டம்

Central-government-says-No-plans-to-develop-National-Employment-Policy

`தேசிய வேலைவாய்ப்பு கொள்கையில் உருவாக்கும் நோக்கம் இல்லை’ என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவை எம்.பி. வெங்கட சத்யவதி கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் `கர்நாடக அரசு, மாநிலத்துக்கென தனி வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கும். அதன்மூலம், தொழில் நிறுவனங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக அரசு இதுதொடர்பாக ஆய்வு செய்யவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முனைந்துள்ளது. இதுதொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும். தொடர்ந்து மாநில அரசு வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.

image

இந்நிலையில் இன்று இதுதொடர்பாக எம்.பி. வெங்கட சத்யவதி வேலைவாய்ப்பு கொள்கை உருவாக்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ராமேஷ்வர், “தற்போதைக்கு தேசிய வேலைவாய்ப்பு கொள்கை ஏற்படுத்தவோ, அது தொடர்பாக வரைவறிக்கையை நிர்ணயிக்கவோ எவ்வித தனி குழுவும் நியமிக்கப்படவில்லை. இருப்பினும், ஆதார அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்குவதற்காக, சில முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

மக்களவையில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கான பதிலின்போது அமைச்சர் ராமேஷ்வர் அளித்த பதிலில், `சமூக பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள், ஊதியங்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகிய நான்கு தொடர்பாக, நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கான வரைவு விதிகளை சுமார் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UT) முன்பே வெளியிட்டுள்ளன' என்று தெரிவித்திருந்தார். இந்த வரைவறிக்கை தொடர்பாக மத்திய அரசு, பங்குதாரர்களின் கருத்துக்களை கேட்டிருந்தது.

image

இந்த மாத தொடக்கத்தில், மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ், `மாநிலங்கள், வேலைவாய்ப்பு கொள்கைக்கென உள்ள சட்ட பிரிவுகளில் என்ன மாற்றம் வேண்டுமென நினைக்கிறார்களோ, அவற்றை உருவாக்கி வைத்துக்கொள்ளவும். சரியான நேரத்தில் அவை செயல்படுத்தப்படும்’ என்று கூறியிருந்தார். இதை அடிப்படையாக வைத்தே, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரைவறிக்கையை தயார்செய்திருக்கும் என சொல்லப்படுகிறது. எது எப்படியாகினும் இப்போதைக்கும் மத்திய அரசுக்கு இதற்கான தனி கொள்கையை உருவாக்கும் நோக்கம் இல்லையென்றே தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்