Published : 04,Jul 2022 12:06 PM

மருத்துவ மேற்படிப்பில் கலந்தாய்வின்றி நடந்த மாணவர் சேர்க்கை... சிபிசிஐடி விசாரணை உறுதி!

CBCID-investigation-confirmed-on-students-Admission-in-medical-studies-without-counselling

மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட முறைகேடு தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020 - 21ம் கல்வியாண்டு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 113 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் 90 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கியதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், `தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு?’ என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

image

அதன்படி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம் எனவும், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய நபர்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவ க்கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்தவும் சிபிசிஐடிக்கு நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டிருந்தார்.

மேலும், தகுதி இருந்தும், மேற்படிப்பு கனவை தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட இரு மனுதாரர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இத்தொகையை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளவும் அனுமதித்துள்ளார்.

image

இந்த உத்தரவுகளை எதிர்த்து, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக் குழு முன்னாள் செயலாளர் செல்வராஜன், மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பளித்தது. அதன்படி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும், மாணவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய உத்தரவுகளை உறுதி செய்த தலைமை நீதிபதி அமர்வு, செல்வராஜனின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

மேலும், தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜன் மீதான துறைரீதியான விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- எம்.முகேஷ்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்