ஆபத்தானதா 'அக்னிபாத்' திட்டம்?! - எச்சரிக்கும் முன்னாள் ராணுவத்தினர்

ஆபத்தானதா 'அக்னிபாத்' திட்டம்?! - எச்சரிக்கும் முன்னாள் ராணுவத்தினர்
ஆபத்தானதா 'அக்னிபாத்' திட்டம்?! - எச்சரிக்கும் முன்னாள் ராணுவத்தினர்

இந்திய ராணுவத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு புதிய திட்டத்துக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பலைகள் உருவாகும் என நிச்சயம் அரசாங்கம் எதிர்பார்த்திருக்காது. "ராணுவத்தில் அதிகப்படியான இளைஞர்களை சேர்க்க போகிறோம்", "ராணுவ வலிமையை பல மடங்கு பெருக்க போகிறோம்" என்ற அறைக்கூவலுடன் இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் திட்டம்தான் 'அக்னிபாத்'. இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 46 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்தில் சேரவுள்ளார்கள். அவர்கள் 4 ஆண்டுகள் ராணுவ வீரர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். நியாயப்படி பார்த்தால், இந்த அக்னிபாத் திட்டத்தை இளைஞர்கள் கொண்டாடி தானே இருக்க வேண்டும். அதை விடுத்து, நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் ஏன் நிகழ்கின்றன என்பதே பெரும்பாலானோர் எழுப்பும் கேள்வியாக உள்ளது. மேலோட்டமாக பார்த்தோமேயானால், இந்த 'அக்னிபாத்' திட்டம் ராணுவத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே தெரியும். ஆனால் சற்று உள்ளார்ந்து பார்த்தால் தான், இத்திட்டத்தின் பின்னால் இருக்கும் அபாயங்களும், பெரும் குறைகளும் வெளிப்படும்.

முதலில், ராணுவத்தில் பணிபுரிவது என்பது ஏதோ ஒரு அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதை போன்றது கிடையாது என்பதை நாம் அனைவரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் எல்லையை கடுங்குளிரிலும், பெரு மழையிலும் பல மணிநேரம் நின்று எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் வேலை சாதாரணமானது கிடையாது. தனது குடும்பத்தை மறந்து, தனது உயிரை துட்சமாக நினைத்தால் மட்டுமே ஒருவரால் அந்த வேலையை பார்ப்பது சாத்தியமாகும். இல்லையெனில் ஒரு சில நிமிடங்கள் கூட அவரால் அங்கு நிற்பது என்பது நிச்சயம் முடியாத காரியம். அப்படியான ஒரு சூழல் நிகழ்ந்தால் நாட்டின் பாதுகாப்பு என்னவாகும் என்பது யாரும் சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. சரி.., ஒருவரால் எப்படி தனது குடும்பத்தையும், உயிரையும் துட்சமாக நினைத்துவிட முடியும்? "அனைத்துக்கும் மேல் நாடு" என்ற எண்ணம் அவரது மனதில் எப்படி தோன்றும்? இவையாவும், இன்று பயிற்சி பெற்று நாளை கிடைத்து விடுவது கிடையாது. அதற்கு பின்னால் பல ஆண்டுகால பயிற்சியும், அதற்கும் மேலாக ஒரு மிகப்பெரிய மனோரீதியிலான காரணமும் இருக்கிறது. அவை ஒவ்வொன்றாக இங்கு பார்ப்போம்.

இப்போது இருக்கும் நடைமுறைப்படி, குறுகிய கால (short term) ராணுவப் பணியில் சேருபவர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும். அதற்கு மேல் அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் அல்லது பணியில் தொடரலாம். நிரந்தர அடிப்படையில் (Long term) சேருபவர்கள் தாங்கள் ஓய்வுபெறும் வயது வரை ராணுவத்தில் பணிபுரியலாம். இவ்வாறு பணியில் சேருபவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ராணுவ வீரர் ஒருவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வோ அல்லது ஓய்வோ பெற்று செல்லும் போது, மிகப்பெரிய தொகை (ரூ.1 கோடி வரை) அவருக்கு கிடைக்கும். அதுதவிர ஓய்வூதியப் பலன்களும் அவருக்கு உண்டு.

ஒருவேளை, ஒரு ராணுவ வீரர் பணியில் இருக்கும் போது உயிரிழந்தால் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் அவரது குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும். இதுவே போர் சூழலில் எதிரி நாட்டு வீரர்களிடம் சண்டையிட்டு, நமது ராணுவ வீரர் உயிரிழந்தால் ரூ.5 கோடி வரையிலான தொகையும் ஓய்வூதியமும் அவரது குடும்பத்தினருக்கு நிச்சயம் கிடைக்கும். விருப்ப ஓய்வு பெற்று வெளி வருபவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் இடஒதுக்கீட்டில் வங்கி உள்ளிட்ட துறைகளில் எளிதில் பணி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு விதவை ஒதுக்கீடும் (war widow quota) வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டை பெற்றிருக்கும் பெண்ணுக்கு, அரசுத் துறைகள் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் அதிக முக்கியத்துவம் தரப்படும். இன்னும் கூறப்போனால், அவர் தேர்வுகளை எழுதினாலே போதுமானது. வேலை உறுதி.

இத்தனை சலுகைகளும் தனக்கு இருக்கின்றன என்ற நம்பிக்கைதான் ஒரு ராணுவ வீரருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தான் உயிரிழந்தாலும் தனது குடும்பம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம்தான் தனது உயிரை துட்சமாக எண்ண வைத்து எதிரிகளுடன் தீரத்துடன் அவரை சண்டையிட வைக்கிறது. நாள்தோறும் நடைபெறும் கடுமையான பயிற்சிகளில் அவர்களை உற்சாகமாக ஈடுபடச் செய்வதும் அந்த மனநிலைதான். இந்த தொடர் பயிற்சிகளே ராணுவ வீரர்களின் மனதை எஃகு போல உறுதியாக்குகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தனை சலுகைகளை தங்களுக்கு வழங்கும் இந்த நாட்டுக்கு, உயிரையும் கொடுக்கலாம் என்ற உச்சபட்ச நாட்டுப் பற்றையும் அவர்களின் மனதில் விதைக்கின்றன. இந்த உச்சபட்ச நாட்டுப் பற்றை ஒரு ராணுவ வீரர் அடைவதற்கு, அவருக்கு குறைந்தது 4 ஆண்டுகால பயிற்சியாவது அவசியம்.

ஆனால், இன்றைய அக்னிபாத் திட்டம் என்ன செய்ய போகிறது? வாழ்க்கையில் விவரம் தெரிய தொடங்கும் பருவமான 17 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதாக கூறுகிறது. அவர்களுக்கு 4 ஆண்டுகால பணியும், அதற்காக 6 மாதக்கால பயிற்சியும் வழங்கப்படும் என்கின்றது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீதத்தினர் மட்டுமே ராணுவத்தில் தொடர்வார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் வெளியேறி விடுவார்கள். இந்த திட்டத்தில் சேரும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளத்தை தவிர, வழக்கமான ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் எந்த பணிச் சலுகைகளும் கிடையாது. குறிப்பாக ஓய்வூதியம் இவர்களுக்கு கிடையாது.  4 ஆண்டுகள் பணி முடித்து வெளியேறும் போது, 'சேவை நிதி' என்ற பெயரில் அவர்களுக்கு சுமார் ரூ.11 லட்சம் மட்டுமே கிடைக்கும். இதில் 5 முதல் 6 லட்சம் அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து பிடிக்கப்பட்டவையே. ராணுவத்தில் இருந்து வெளியேறிய பின்னர், அவர்களுக்கு ஆயுதப்படையில் முன்னுரிமை என்பதை தவிர மற்ற எந்த துறைகளில் ஒதுக்கீடும் (கோட்டா) கிடையாது. பணியின் போது அவர் இறந்தாலோ அல்லது உடல் ஊனமுற்றாலோ ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். குடும்பத்தில் வேறு யாருக்கும் வேலைவாய்ப்புக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் ஏதும் கிடையாது.

இப்போது யோசித்து பாருங்கள். வழக்கமான ராணுவ வீரர்கள் களத்தில் காண்பிக்கும் வீரத்தையும், தீரத்தையும் இந்த அக்னி வீரர்கள் களத்தில் எப்படி காட்டுவார்கள்? போரில் உயிரிழந்தாலும் தனது மனைவியும், பிள்ளைகளும் கஷ்டப்பட மாட்டார்கள் என்ற மனநிலையில் இருக்கும் ஒருவர் போர் முனையில் காட்டும் துணிச்சலுக்கும், வெறும் 6 மாதக்கால பயிற்சியை முடித்து செல்லும் அக்னி வீரர்களின் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எப்படி இருக்கும்? 6 மாத பயிற்சியை முடித்துவிட்டு ஒரு என்சிசி மாணவனுக்கு இணையான தகுதியை பெற்றவர், ராணுவ வீரருக்கு இணையாக களத்தில் தொடர்ந்து செயலாற்ற முடியுமா? ராணுவத்தின் கடும் பயிற்சிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியிலேயே அவர் வெளியேற மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? மிக முக்கியமாக, ராணுவத்தில் இன்றியமையாததாக கருதப்படுவது உயரதிகாரிகளின் கடுமையான உத்தரவுக்கு கீழ்ப்படியும் ஒழுக்கம்தான். 4 ஆண்டுகள் மட்டும்தானே இங்கு இருக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருக்கும் ஒருவருக்கு, இந்த கீழ்ப்படிதல் எங்கனம் வரும்? இதுபோன்ற ஏராளமான கேள்விகளை பணியில் இருக்கும் ராணுவத்தினரும், முன்னாள் ராணுவத்தினரும் எழுப்புகிறார்கள்.

குறைபாடுகளும்... அபாயங்களும்...

ராணுவ விவகாரங்களை கூட ஒதுக்கி விடுவோம். 'அக்னிபாத்' திட்டத்தில் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்? தனது குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொள்ளும் இளைஞர்கள்தான் 'அக்னிபாத்' திட்டத்தில் அதிகம் இணைவார்கள். ஒரு இளைஞனின் வாழ்வில் முக்கியமான காலக்கட்டமே 17 முதல் 21 வயது வரை தான். அந்தக் காலக்கட்டத்தை ராணுவத்தில் கழித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள், அதன் பின்னர் தங்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள்? பணித்திறன் ஏதும் இன்றி வெளியே வரும் அவர்களை, எந்த நிறுவனம் வேலைக்கு எடுத்துக் கொள்ளும்? 11 லட்சம் ரூபாயை மட்டுமே வைத்துக் கொண்டு அவர்கள் எத்தனை வருடங்களை ஓட்ட முடியும்? இவை அனைத்துமே இந்த 'அக்னிபாத்' திட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடுகள் என பெரும்பாலான ராணுவத்தினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் இந்தக் குறைபாடுகளை தாண்டி அபாயங்களும் இந்த திட்டத்தில் ஏராளமாக இருக்கின்றன. ராணுவத்தில் வழங்கப்படும் கடுமையான பயிற்சிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறும் இளைஞர்களும், முழுமையாக பணியை முடித்து வெளியேறி, வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களும் ஆயுதப் பயிற்சிகளை பெற்றவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த இளைஞர்களுக்கு வேலை இல்லாததால், அவர்கள் எளிதில் தீவிரவாத இயக்கங்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள். அதேபோல, ராணுவ ரகசியங்களை தெரிந்துகொள்ள தீவிரவாத இயக்கங்களும் தங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை 4 ஆண்டுகால ராணுவப் பணிக்கு அனுப்பக் கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றன. இது நிராகரிக்கத்தக்க விஷயம் அல்ல. 1970-களில் ராணுவத்தில் சுமார் 6, 7 ஆண்டுக்கால பயிற்சி பெற்று திரும்பியவர்களே, காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தில் அதிகம் சேர்ந்தார்கள் என்பது வரலாறு. இந்த அத்தனை விஷயங்களையும் ஆராய்ந்த பிறகே 'அக்னிபாத்' திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என இப்போதைய ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரும் எதிர்பார்க்கிறார்கள்.

இளைஞர்களை அதிக அளவில் ராணுவத்தில் சேர்ப்பதற்காக கொண்டு வந்தததே 'அக்னிபாத்' திட்டம் என அரசாங்கம் கூறினாலும், ராணுவ வீரர்களின் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்பதை அரசே ஒப்புக் கொள்கிறது. செலவினங்களை குறைப்பதற்காக புதுப்புது முயற்சிகளையும், சோதனைகளையும் மற்ற எந்த துறைகளில் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால், ராணுவம் அதுபோன்ற சோதனைக் களம் அல்ல. ஏனெனில், ராணுவத்தில் நடக்கும் ஒரு சிறு தவறும் கூட, ஒட்டுமொத்த நாட்டையும் பெரிய விலையை கொடுக்க செய்துவிடும். ஜாக்கிரதை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com