Published : 08,Sep 2017 08:44 AM
நீட் விவகாரத்தில் மீண்டும் குரல் கொடுப்போம்: தம்பிதுரை

நீட் தேர்வு என்பது முடிந்து போன விவகாரம் என்று கூறியிருந்த மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கால்கோள் நிகழ்ச்சியில் தம்பிதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது என்றும், தற்போது கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். அந்த கருத்து வேறுபாட்டை நீக்க முதலமைச்சர் முயற்சி செய்து வருவதாகவும், அதிமுக உட்கட்சிப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, நீட் தேர்வு என்பது முடிந்து போன விவகாரம் என்று கூறியிருந்த தம்பிதுரை, தமிழகம் முழுவதும் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடைபெறும் நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.