Published : 25,Apr 2022 08:18 AM
தொடரும் சோகம் - 8-வது போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வி

ஐபிஎல் நடப்பு தொடரில், தொடர்ந்து 8-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது மும்பை அணி. லக்னோவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சச்சின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல் வெற்றியை சந்தித்து விடுவோம் என்ற முயற்சியுடன் வான்கடே மைதானத்தில் லக்னோ அணியை எதிர்கொண்டது, மும்பை. முதலில் பேட் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக், பத்து ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு புறம் கேப்டன் ராகுல் நேர்த்தியாக விளையாடி மும்பை வீரர்களை மூச்சிறைக்க வைத்தார். 61 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதத்தை விளாசி மைதானத்தை அதிர வைத்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியில், கேப்டன் ரோகித் சர்மா, வேகமாக ரன்கள் சேகரிக்க மற்றொரு புறம் இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர், டேவால்ட் பிரவிஸ், ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
மும்பை அணியால், 20 ஒவர்களின் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லக்னோ அணி நடப்பு தொடரில் 5ஆவது வெற்றியை ருசிக்க, மும்பை அணியோ இம்முறையும் லக் 'நோ' என்ற வகையில் 8ஆவது தோல்வியை சந்தித்தது.
இதையும் படிக்கலாம்: மங்கி வரும் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு