Published : 21,Apr 2022 02:21 PM
தமிழ்நாடெங்கும் மின் வினியோகம் பாதிப்பு ஏன்?: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மத்திய மின் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தில் 750 மெகாவாட் தடைபட்டதே தமிழ்நாடெங்கும் நேற்று மின்வெட்டு ஏற்பட காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் மேலும் விளக்கம் அளித்துள்ளனர். தூத்துக்குடியில் உள்ள தேசிய அனல் மின் கழகத்திடமிருந்து 200 மெகாவாட் கிடைக்காமல் நின்று போனதாக தெரிவித்த அதிகாரிகள் இதே போல நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து 480 மெகாவாட் கிடைக்கவில்லை எனக் கூறினர். கர்நாடகாவின் குட்கியில் உள்ள தேசிய அனல் மின் கழக ஆலையிலிருந்து 115 மெகாவாட் வராமல் போனதாகவும் இதன் மூலம் மொத்தம் 795 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் போனதாகவும் டேன்ஜெட்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய மின் தொகுப்பிலிருந்து 795 மெகாவாட் திடீரென கிடைக்காமல் போனதால் தமிழ்நாடு இருளில் மூழ்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சாரம் வாங்க முடியவில்லை என்றும் நிலக்கரி தட்டுப்பாடே இதற்கு காரணம் என்றும் அதிகாரிகள் கூறினர். எனினும் சில மணி நேரங்களில் மின்சார வினியோகம் சீரடைந்ததாகவும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: மோடி போட்டோவை உடனே மாட்டுங்க’ - ஊராட்சி அலுவலகத்தில் பாஜக - திமுகவினரிடையே வாக்குவாதம்