Published : 24,Mar 2022 12:19 PM

சி.எஸ்.கே-வின் பலம் தெரியும்... இந்த சீசனில் பலவீனங்கள் என்ன?! #IPL2022

ms-dhoni-led-chennai-super-kings-swot-analysis-ahead-of-IPL-2022

ஐபிஎல் என்றாலே சட்டென ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் ஞாபகத்திற்கு வருவது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதற்கு காரணம் ஒவ்வொரு சீசனிலும் அந்த அணி ஐபிஎல் களத்தில் செலுத்தி வரும் ஆதிக்கம் தான். சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 12 சீசன்களில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐந்து முறை நூலிழையில் சாம்பியனாகும் (ரன்னர்ஸ்-அப்) வாய்ப்பை மிஸ் செய்துள்ளது. ஒரு முறை அரையிறுதி, ஒரு முறை பிளே ஆப் சுற்றோடும் தொடரை நிறைவு செய்துள்ளது. கடந்த 2020 சீசனில் மட்டுமே லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது. 

image

தற்போது வரும் சனிக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ள 15-ஐபிஎல் சீசனுக்காக சூரத் நகரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது சென்னை அணி. இந்த முறை மெகா ஏலத்தின் மூலம் வீரர்களை ஒவ்வொரு அணியும் ஏலம் எடுத்தன. இருந்தாலும் சென்னை அணி கூடுமான வரையில் கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் அங்கம் வகித்த வீரர்களை கிட்டத்தட்ட அப்படியே வாங்கியுள்ளது. சென்னை அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம். 

image

அணி விவரம்!

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ராயுடு, பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஷிவம் தூபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், டேவான் கான்வே, டுவைன் ப்ரிடோரியஸ், சுப்ரான்ஷு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சவுத்ரி, ஹரி நிஷாந்த், ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா.

image

அணியின் பலம்!

சென்னை அணியின் முதன்மையான பலம் என்றால் அது ‘தி ஒன் அண்ட் ஒன்லி’ மகேந்திர சிங் தோனி மட்டுமே. அவர் சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். கடந்த சில ஐபிஎல் சீசன்களில் ரன் குவிக்கவில்லை என்ற விமர்சனம் கூட இருக்கலாம். ஆனால் அவரது கேப்டன்சி திறன் தான் சென்னை அணியை ஐபிஎல் காட்டில் சிங்க நடை போட வைக்கிறது. 

எத்தனையோ மேட்ச் வின்னிங் வீரர்கள் சென்னை அணிக்காக விளையாடி உள்ளார்கள். அவர்கள் அணிக்குள் வரலாம், போகலாம். ஆனால் அணியை முன்னிருந்து வழிநடத்துபவர் ‘தல’ தோனி. 

ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை தோனி கொடுக்க தவறி இருக்கலாம். ஏனெனில் வீரர்கள் ஃபார்மில் இருப்பதும், ஃபார்ம் அவுட்டாவதும் வழக்கம். ஆனால் லீடராக அவரது அனுபவம் களத்தில் பேசுகிறது. அது துளியளவு கூட சோடை போகவில்லை. கடந்த சீசனில் தோனி எடுத்த மொத்த ரன்கள் 114. அவரது அதிகபட்ச ரன்கள் வெறும் 18 தான். இருந்தாலும் பேட்டிங் ஆர்டர் தொடங்கி அனைத்தையும் சரியாக திட்டமிட்டு சாம்பியன் பட்டத்தை வென்று காட்டியவர். 

image

முக்கிய வீரர்கள்!

சென்னை அணியில் எப்போதும் ஆல்-ரவுண்டர்கள் அதிகம் இருப்பார்கள். இந்த முறையும் அணியில் ஆல்-ரவுண்டர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. ஜடேஜா, மொயின் அலி, பிராவோ, தூபே, சான்ட்னர் மாதிரியான ஆல்-ரவுண்டர்கள் அணியில் உள்ளனர். 

டூப்ளசிஸ் விட்டுச் சென்றுள்ள தொடக்க ஆட்டக்காரர் பணியை டேவான் கான்வே தொடருவார் என்றே தெரிகிறது. ஐசிசி டி20 ரேங்கிங்கில் டாப் 5 வீரர்களில் அவர் ஒருவர். வேகப்பந்து வீச்சு மட்டுமல்லாது சுழற்பந்தையும் திறம்பட விளையாடுபவர். அவருடன் தொடக்க வீரராக களம் இறங்க உள்ள ருதுராஜ் குறித்து சொல்லவே வேண்டாம். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன். இந்த முறையும் அவர் அதை அப்படியே செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தப்பா, மொயின் அலி, ராயுடு ஆகியோர் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது பேட்ஸ்மேன்களாக களம் இறங்க வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து ஜடேஜா, தோனி, பிராவோ, தூபே வரலாம். 

இவர்களை தவிர இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அணியில் ஆடும் லெவனில் விளையாட வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது. இவர் பினிஷிங் ரோலை கவனிக்கும் திறன் படைத்தவர். இது தவிர மீதமுள்ள ஒரு இடத்தில் எந்த பவுலரை சென்னை அணி விளையாட வைக்க உள்ளது என்பது தான் கேள்விக்குறியாகி உள்ளது. பெரும்பாலும் அந்த வாய்ப்பு வெளிநாட்டு வீரருக்கே சென்று சேரும் என தெரிகிறது. 

டீப் பேட்டிங் டெப்த், பவர் ஹிட்டர்களை கொண்டு நிரம்பி வழிகிறது சென்னை அணி. 

image

பின்னடைவு!

சென்னை அணிக்கு பின்னடைவு என்றால் அது தீபக் சாஹர் இல்லாத குறையாக தான் இருக்கும். பவர் பிளேயில் எதிரணியை அப்செட் செய்யக்கூடியவர். விக்கெட்டுகளை கைபற்றி கொடுக்கும் வல்லமை படைத்தவர். பவர் பிளேயில் மட்டும் 35 முறை 3 ஓவர்கள் வீச அவருக்கு தோனி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவரது இடத்தை பூர்த்தி செய்யப்போவது இந்திய வீரரா அல்லது வெளிநாட்டு வீரரா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் சாஹர் சென்னை அணியின் பவுலிங் யூனிட்டின் லீடராக பார்க்கப்பட்டவர். அவர் இல்லாதது சென்னை அணியின் பவுலிங் படைக்கு கொஞ்சம் பலவீனத்தை சேர்க்கிறது.  

இருந்தாலும் இந்த சிக்கலை சென்னை அணி ஒவர்கம் செய்து சிறப்பாக விளையாடும் என எதிர்பார்ப்போம். அது ஐந்தாவது முறையாக சி.எஸ்.கே கோப்பை வெல்ல உதவட்டும்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்