Published : 03,Nov 2021 06:53 PM

சமணம் முதல் சீக்கியம் வரை - தீபாவளி கொண்டாட்டத்திற்கு பின்னால் இத்தனை மதங்களின் பின்னணியா?

From-Jainism-to-Sikhism-the-detailed-background-of-so-many-religions-behind-the-Celebration-of-Diwali-Festival

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி தீவு போன்ற நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகை தொடர்பான பல்வேறு மதப் பின்னணி குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

image

தீபாவளி பெயர் காரணம்

தீபாவளி என்பது சமஸ்கிருத சொல்லாகும். சமஸ்கிருதத்தில் 'தீபம்' என்றால் விளக்கு, 'ஆவளி' என்றால் வரிசை என பொருட்படும். எனவே, தீபாவளி என்பது வரிசையாக விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடும் பண்டிகையாகும். 

இயற்கை, உற்பத்தி, பண்டிகைகள்

பொதுவான பண்டிகை காலங்கள் என்பது இயற்கையோடு சேர்ந்து மனிதர்கள் தங்களுக்கான உணவு உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், இயற்கையில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களை குறிக்கும் வகையிலும் உருவாகியிருக்கும். உலகம் முழுவதுமே ஜனவரி மாதத்தில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படும். தமிழகத்திலும் மிகச் சிறப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். கோடைகாலமான சித்திரை, வைகாசி மாதங்களில் கோடைகால பண்டிகைகள் கொண்டாடப்படும். மழையை வரவேற்கும் விதமாக ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படும். அந்த வரிசையில் தான் தீபாவளியும், மார்கழி பண்டிகையும் மழை மற்றும் பனிக்காலத்தின் பண்டிகைகளாக உள்ளன. அதனால், மதங்கள் உருவாவதற்கு முன்பே ஆதிகால பழங்குடியின மக்களிடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. 

image

சமணமும் தீபாவளி கொண்டாட்டமும்:

தீபாவளி சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை என்கிறார் சமண-பௌத்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. சமணர்களின் இருபத்தி நாலாவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகர அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்கே கூடியிருந்த மக்களுக்கு அறிவுரை வழங்கினார். இரவு முழுவதும் அவர் வழங்கிய சொற்பொழிவு அதிகாலையில்தான் முடிவடைந்தது. அதனால் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் வீடுகளுக்குச் செல்லாமல், அவரவர் இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டனர்.

அப்போது வர்த்தமான மகாவீரர், அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வீடுபேறு அடைந்தார் (இறந்தார்). உலகுக்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை நினைவுகூர்ந்து வழிபடும் வகையில், அவர் இறந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி விழா கொண்டாடும்படி பாவாபுரி அரசர் ஏற்பாடு செய்தார். மகாவீரரின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அந்தப் பண்டிகைதான் தீபாவளி (தீபம் - விளக்கு, ஆவளி - வரிசை).

“சமண சமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருமளவில் இந்து மதத்தில் சேர்ந்தனர். அதற்குப் பிறகும் தீபாவளியைக் கொண்டாடி வந்தனர். அதைத் தொடர்ந்து இந்துக்களும் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்” என்று மயிலை சீனி. வேங்கடசாமி தனது ‘சமணமும் தமிழும்' என்ற நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

image

மகாபாரதமும் தீபாவளி பண்டிகையும்:

மகாபாரத கதையின்படி, சகுனியுடம் சூதாட்டத்தில் தோற்று எல்லாவற்றையும் இழந்த பாண்டவர்கள் 12 வருட வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் செய்யும் நிலை ஏற்பட்டது. பாண்டவர்கள் வனம் செல்ல, அவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தத்தின் மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்திரபிரஸ்த நகரமே இருண்டு போனது.

காலம் கழிந்தது. கனிந்தது. பல சோதனைகளைக் கடந்து வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் நிறைவு செய்து நாடு திரும்பினார்கள் பாண்டவர்கள். அவர்களது வருகையை அறிந்த இந்திரபிரஸ்த மக்கள் பேரானந்தம் அடைந்தனர்.

அந்த நகரமே விழாக்கோலம் பூண்டது. தென்னை, வாழை, பாக்கு, கமுகு மரங்களால் தோரணங்கள் அமைத்தார்கள். வீதியெங்கும் நீர் தெளித்து மாக்கோலம் இட்டு அலங்கரித்தார்கள். எங்கும் மங்கல ஒலி முழங்கின. அதுமட்டுமா? வீட்டுக்கு வீடு தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து மகிழ்ந்தார்கள். தீபாவளி கொண்டாட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்றும், பாண்டவர்கள் நாடு திரும்பியது ஒரு தீபாவளித் திருநாள் என்றும் கூறுவார்கள்.

image

ராமாயணமும் தீபாவளி பண்டிகையும்:

ராமாயண கதையின் படி, ராம‌ர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். அவருடன் லட்சுமணனும், சீதையும் சென்றனர். வனவாசத்தின் போதுதான் சீதையை ராவணன் தூக்கிச் சென்றுவிடுவார். இல‌‌ங்கை செ‌ன்று ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, தனது மனை‌வி சீதையை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு ராமர் அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்தா‌ர்.

த‌ன் வனவாச‌ம் முடி‌ந்து நா‌ட்டை ஆள வரு‌ம் ராமரை வரவே‌ற்க ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக ‌தீப‌ங்களை ஏ‌ற்‌றி கொ‌ண்டாடினா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ‌தீபாவ‌‌ளி அ‌ன்று ‌திரு‌விள‌க்குகளை வ‌ரிசையாக ஏ‌ற்‌றி வை‌க்கு‌ம் வழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக கூறுவா‌ர்க‌‌ள்.

image

கிருஷ்ண புராண கதைகளும் தீபாவளியும்:

நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. புராணக் கதைகளின் படி, திருமால் வராக அவதாரம் (காட்டு பன்றி) எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான பூமாதேவிக்கு பிறந்த மகன்தான் நரகாசுரன். தனக்கு யாராளும் மரணம் நேர கூடாதென்று பிரம்மனை நோக்கி அவன் கடும் தவம் புரிந்தான். 

தனக்கு யாராளும் மரணம் நேர கூடாதென்று பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படகூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.

image

அதன் பின்பு, மூவுலகிலும் நரகாசுரன் அட்டூழியம் செய்ததாகவும், தேவர்கள் உள்ளிட்ட எல்லோரும் கிருஷ்ணரிடம் செய்து நரகாசுரனை அழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் புராணம் கூறுகிறது. அதன்படியே, பூமா தேவியான சத்யபாமா உதவியுடன் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார். இறப்பதற்கு முன்பு நரகாசுரன், ‘தீயவனனான என்னுடைய இறப்பினை மக்கள் கொண்டாட வேண்டும்’ என கிருஷணரிடம் கேட்டுக் கொண்டதாகவும் அதன்படியே தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றும் புராணம் கூறுகிறது.

ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியை சிவபெருமான் தமது சரிபாதியாகக் கொண்டு அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எடுத்ததை போற்றும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

மற்றொரு புராணத்தின் படி தீபாவளி பண்டிகை பெண் தெய்வமான மகாலட்சுமிக்கு பிரசித்தி பெற்ற நாளாக கொண்டாடப்படுகிறது. சுத்தமான வீட்டிற்குள் லட்சுமி வருவாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தீபாவளிக்கு முன்னதாக வீடுகளை சுத்தம் செய்து மகாலட்சுமியை வரவேற்கிறோம். வட இந்தியாவில் லட்சுமி பூஜை செய்யும் வழக்கம் அதிக அளவில் உள்ளது.

வணிகர்கள் இந்நாளில் விநாயகரை வணங்கி புதுக்கணக்கு தொடங்குவர். ஒடிசா மாநிலத்தில் தீபாவளியன்று இறந்த முன்னோர்களை வழிபடும் பழக்கம் உள்ளது. மேற்கு வங்கத்தில் தீபாவளி முன்னிட்டு காளி பூஜை நடத்தப்படும். 

image

சீக்கியர்களின் தீபாவளி

சீக்கியர்களும் தீபாவளி பண்டிகையை ‘பண்தி சோர் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோபிந்த், முகலாய மன்னர் ஜஹாங்கீரின் சிறைப்பிடியில் இருந்து தப்பிய நாள் இதுவாகும். மேலும், இதே நாளில் தான் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

image

தீபாவளி பண்டிகையும் திராவிட இயக்க கருத்தியலும்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடக் கூடாது என்றும் திராவிட இயக்கம் உள்ளிட்ட சில தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்படும். அதற்கு காரணமாக புராணக்கதைகளில் வரும் வரும் நரகாசுரன் திராவிட அரசன் என்றும் அவனை ஆரிய தெய்வம் கொன்றொழிப்பது போல் உள்ளது என்றும் கூறுகின்றனர். 

இதுதொடர்பாக 1949ம் ஆண்டு குடியரசு பத்திரிகையில் வெளியிடப்பட கட்டுரையில், “திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.

இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?

திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.

தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

image

எளிய மக்களும் தீபாவளி பண்டிகையும்

புராணக் கதைகளும், மதப் பின்னணி என பல காரணங்கள் இருந்தாலும் எளிய எல்லா பண்டிகைகளையும் சிறப்பாகவே கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு இந்த கதைகள் கூட பெரும்பாலும் தெரியவே தெரியாது. அப்படித்தான் பல பண்டிகைகள் மக்கள் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்