
மழைக் காலத்தில் சாலையில் உள்ள வெட்டுகள், குழிகளில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 5500 கி.மீ சாலைகள் உள்ளன. இதில் 942 உட்புற சாலைகள் மற்றும் தெருக்களில் 30 ஆயிரம் சதுர.மீ பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சாலை குழிகளை சரிசெய்யும் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 10 லட்சம் வீதம் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தந்த மண்டல அதிகாரிகள் மேற்பார்வையில உடனடியாக சாலைகளை சீர்செய்யும் பணிகளை முடித்து மாநகராட்சிக்கு அறிக்கை கொடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. சாலை பராமரிப்பு முறையாக மேற்கொள்ளாமல் விபத்துக்கு காரணமாக அமைந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிண்டி சின்னமலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதபமாக உயிரிழந்தார். இது குறித்து நெடுஞ்சாலை துறைக்கு விளக்கம் கேட்டு கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.