
சேலம் அருகே ஆனைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி மீண்ட இளம் பெண் சிவரஞ்சனி தான் மறுபிறவி எடுத்து வந்திருப்பதை போல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆனைவாரி அருவிக்கு குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்ற சிவரஞ்சனிக்கு கடந்த 23ஆம் தேதி வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகிவிட்டது. அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அங்கிருந்தவர்கள் அவசரஅவசரமாக மறுபகுதிக்குச் சென்று விட்டனர். ஆனால் சிவரஞ்சனி மட்டும் தனது அண்ணனின் 7 மாத குழந்தையுடன் சிக்கிக் கொண்டார். கரையின் மறுபுறம் இருந்த சிவரஞ்சனியின் அண்ணன் சிவா ஆர்ப்பரித்து வந்துகொண்டிருந்த வெள்ளத்திற்கு இடையில் புகுந்து நீந்தி தனது தங்கையை காப்பாற்ற வந்துள்ளார்.
அங்கு ஏற்கனவே இருந்த அப்துல் ரகுமான் மற்றும் லட்சுமணன் சிவரஞ்சனியை காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் மீட்புப் பணியில் இணைந்து கொண்டார் சிவா. தனது தங்கையையும் குழந்தையையும் மீட்ட அந்த பதைபதைப்பு மிகுந்த நிமிடங்களை விவரிக்கிறார் சிவா.
வெள்ளத்திற்கு இடையே மாட்டிக்கொண்ட தான் பிழைத்து வந்ததை மறுபிறவி எடுத்து வந்தது போல் உள்ளது என தெரிவிக்கிறார் சிவரஞ்சனி. அந்த நிமிடத்தில் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தன் மனதில் இருந்ததாகவும் கூறுகிறார்.தனது மனைவி சிவரஞ்சனி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த கணத்தில் அவரை மீண்டும் பார்ப்போமா என்ற பயமே மனதில் வந்துவிட்டதாக கூறுகிறார் அவரது கணவர் மூர்த்தி.
வெள்ளத்தில் சிக்கிய இரு உயிர்களை தீரத்துடன் காப்பாற்றியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், இரு உயிர்களை காப்பாற்ற காரணமான அப்துல் ரகுமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டியுள்ளார். இதற்கிடையே சேலத்தில் உள்ள அருவிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உடனடியாக எச்சரிக்கை பலகைகளை வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.