[X] Close

மே.வங்கம், ஒடிசா வியூகம் உ.பி.க்கு கைகொடுக்குமா?: பிரியங்காவின் முயற்சிக்கு பலன் கிட்டுமா?

சிறப்புக் களம்

Priyanka-Gandhi-To-Give-40-percent-Tickets-to-Women-Did-It-Work

அடுத்தாண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச தேர்தலை நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸை உயிர்ப்பிக்க போராடிக்கொண்டிருக்கிறார் பிரியங்கா காந்தி. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் போட்டியிட 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். பெண்கள் பெருமளவில் உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடுவார்கள்'' என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஆனால், பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், ''ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் நான் அங்கே போட்டியிட்டுதானே ஆகவேண்டும்'' என்று கூறியிருந்தார்.


Advertisement

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் பிரியங்கா காந்தியின் பெண்களுக்கான 40சதவீத இடங்கள் தொடர்பான அறிவிப்பு அம்மாநில அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம்.

பிரச்சாரத்திற்காக முதன்முறையாக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி! | nakkheeran


Advertisement

மேற்குவங்கமும், ஒடிசாவும் முன்னோடி:

பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை காண முடிகிறது. உதாரணமாக கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 40சதவீத இடங்கள் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவைத் தொகுதியில் 17 பெண் வேட்பாளர்களை அக்கட்சி நிறுத்தியது. இதில் 9 பேர் வெற்றிப்பெற்றனர். இது கிட்டத்தட்ட 50 சதவீத்ததை நெருங்கிய வெற்றி. சிறப்பான தொடக்கமாகவும் இருந்தது. பலரும் தீதியின் இந்த முடிவை வரவேற்றிருந்தனர்.

அதேபோல, ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத்தொகுதியில் 7 தொகுதியில் பெண்கள் போட்டியிடுவார்கள் என நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் அறிவித்தது. போட்டியிட்ட 7 தொகுதிகளில் 5 இடங்களில் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். போட்டியிட்ட இடங்களின் அடிப்படையில் ஆண் வேட்பாளர்களைக்காட்டிலும் பெண் வேட்பாளர்களின் வெற்றி அதிகமாகவே இருந்தது. இதன்மூலம் மேற்குவங்காளமும், ஒடிசாவும் பெண்வேட்பாளர்களை போட்டியிட வைத்து மேற்கண்ட சோதனை முயற்சிகள் நல்ல பலனையே கொடுத்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இது உத்தரப் பிரதேசத்துக்கும் கைகொடுக்குமா என்றால் அது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement

Priyanka Gandhi starts campaigning in Indian election | Financial Times

திரிணாமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. மேலும், அங்கே அவர்கள் பெண்களை குறிவைத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். குறிப்பாக அவை ஏழைப்பெண்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக திரிணாமூல் காங்கிரஸை எடுத்துக்கொள்வோம். மேற்குவங்கத்தில் பாஜகவைக்காட்டிலும், திரிணாமூல் காங்கிரஸூக்கு ஏழைப் பெண்களிடம்  மிகுந்த வரவேற்பு உள்ளது. தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது ஆதிவாசி மக்களை பொறுத்தவரை பெண்களின் ஆதரவு மம்தா கட்சிக்கும், ஆண்களின் ஆதரவு பாஜகவுக்கும் இருப்பதை அறிய முடிகிறது. அம்மாநிலத்தில் ஏழை மக்களை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் உணவு மற்றும் பொருளாதார முன்னேற்ற திட்டங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

Priyanka Gandhi will be face of Congress election campaign in U.P., says  P.L. Punia - The Hindu

பெண்களுக்கான திட்டங்களை அமல்படுத்தியதன் மூலமாக ஒடிசாவில் நவீன் பட்நாயக் அரசால் மீண்டும் அங்கு ஆட்சியை பிடிக்க முடிந்தது. குடும்ப பெண்களுக்கான மருத்துவ காப்பீடு, கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பூதியம், பெண் விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன்கள், இளம் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் என பல்வேறு பெண்கள் நலன்சார்ந்த திட்டங்களை ஒடிசா அரசு செயல்படுத்தியுள்ளது.

இப்படியாக திரிணாமூல் காங்கிரஸூம் சரி, பிஜூ ஜனதா தளமும் சரி, ஆட்சியிலிருந்துகொண்டும், பெண்களுக்கான நலத்திட்டங்களை அமல்படுத்தியதன் விளைவாக, பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி அவர்களால் வெற்றியை அறுவடை செய்ய முடிந்தது.

உத்தரப் பிரதேசத்துக்கு இது கைகொடுக்குமா?

'உத்தரப் பிரதேச தேர்தலில் 40சதவீத இடங்களில் பெண்களை போட்டியிட வைப்போம்' என்று கூறும் காங்கிரஸூக்கு மேற்கண்ட மாநிலங்களின் பார்முலாக்கள் கைகொடுக்குமா என்பது சந்தேகம்தான். காரணம், உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸூக்கு பெண்களின் ஆதரவை திரட்டுவது சவாலானது. பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவது காங்கிரசுக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தாலும், ஒட்டுமொத்தமாக பெண்களின் ஆதரவு இல்லாவிட்டால் அது பெரிய வித்தியாசத்தை வழங்காது.

Uttar Pradesh polls: Congress 'open-minded' on forming alliance, says  Priyanka Gandhi

இதில் மற்றொரு பிரச்னை என்னவென்றால், ஒரு கட்சி இதுபோன்றதொரு முன்னெடுப்பை மேற்கொள்ளும்போது, பெண் வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்துவது முக்கியம். கடந்த காலங்களில் பெண்கள் குறித்த காங்கிரஸின் தவறான அணுகுமுறைகளை மறக்கடிக்கச்செய்யும் வகையில் அக்கட்சி உழைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

எப்படியிருந்தாலும், இது போன்ற பரிசோதனையை தொடங்க உத்தரப் பிரதேசம் ஒரு நல்ல மாநிலம். மாநிலத்தில் இதுபோன்ற புதிய வகையான அரசியலை முயற்சித்தால் அது நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Advertisement

Advertisement
[X] Close