Published : 02,Oct 2021 08:05 PM

மீண்டும் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் - பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா?

DC-defeated-MI-by-4-wickets-in-the-match-number-46-of-the-IPL-2021

நடப்பு ஐபிஎல் சீசனின் 46-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 129 ரன்களை எடுத்தது. அந்த இலக்கை விரட்டியது டெல்லி. 

தவான் மற்றும் பிருத்வி ஷா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். டெல்லி அணி விரட்டியது குறைவான இலக்கு தான். இருப்பினும் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது டெல்லிக்கு ஆட்டத்தில் பின்னடைவை கொடுத்தது. தவான், பிருத்வி மற்றும் ஸ்மித் அவுட்டாகி இருந்தனர். பின்னர் களத்திற்கு வந்த பண்ட், 26 ரன்கள் சேர்த்து அவுட்டானார். தொடர்ந்து அக்சர் பட்டேல், ஹெட்மயர் அவுட்டாகினர். 

மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணி பேட்ஸ்மேன்களை இம்சித்தனர். இருப்பினும் ஷ்ரேயஸ் ஐயர் நிதானமாக விளையாடி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை எடுத்து சென்றார். அவருக்கு அஸ்வின் ஒத்துழைப்பு கொடுத்தார். அதன் பலனாக 19.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அஸ்வின் சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்தார். அஸ்வின் 20(21), ஸ்ரேயாஸ் ஐயர் 33(33) ரன்களுடன் களத்தில் இருந்தனர். 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

image

மும்பை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு எப்படி?

மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5இல் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளை தான் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்து நடைபெற உள்ள இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதே நேரத்தில் நான்காவது இடத்தை பிடிப்பதற்கான ரேஸில் உள்ள கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் அடுத்து விளையாடுகின்ற போட்டிகளை பொறுத்து தான் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகும்.

ராஜஸ்தான் அணி விளையாடுகின்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் செல்லும். பஞ்சாப் அணி விளையாட உள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் தலா ஒவ்வொரு போட்டியில் தோல்வியை தழுவி இருந்தால் பஞ்சாப் பிளே ஆப் செல்லும். கொல்கத்தா அணி அடுத்து விளையாட உள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சென்றுவிடும். 

மும்பை அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே வெயிட்டான வீரர்கள் ஏராளமாக உள்ளனர். ஒவ்வொரு சீசனிலும் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் தெறிக்கவிடுவார்கள். ஆனால், இந்த முறை பேட்டிங் அவர்கள் ஜொலிக்க தவறிவருகிறார்கள். நல்ல பார்ட்னர்ஷிப் அவர்களுக்கு அமைவதேயில்லை. தொடக்கவீரர்கள் ரோகித், டிகாக் தான் அதிக அளவில் நம்பிக்கை தருகிறார்கள்.

2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் சாம்பியன் ஆன அணி மும்பை இந்தியன்ஸ் அணி. பல சீசன்களில் கடைசி கட்டத்தில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கும், ஆனால் எப்படியாவது சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுவிடும். நடப்பு சீசனிலும் அந்த மேஜிக் தொடர்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்