Published : 02,Sep 2021 06:34 PM

சங்க இலக்கிய தொகுப்பும், திராவிடக் களஞ்சியமும்: எதிர்ப்புக் காரணங்கள் Vs முரசொலி தலையங்கம்

Murasoli-article

சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு திராவிடக் களஞ்சியம் என பெயர் சூட்டுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், முரசொலி பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.

சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் திராவிட என்ற சொல்லே கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இன உணர்வும், தமிழ்த் தேசியமும் வளர்ந்து வரும் இக்காலத்தில் தமிழ் -தமிழினப் பெருமிதங்களை திராவிட மாயையில் மறைக்கும் செயலை திமுக கைவிட்டால் நல்லது எனவும் வலியுறுத்தியுள்ளார். திராவிடக் களஞ்சியம் என்பதற்கு பதில் தமிழ்க் களஞ்சியம் என்றே குறிப்பிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தெரிவித்துள்ளார்.

image

இந்நிலையில், திராவிட களஞ்சியம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் திமுகைவின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலியில் தலையங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தலையங்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று சொல்வதைப் பார்த்து, ‘திராவிடத்துக்குள் வர முடியாதவர்கள்’ காய்ச்சல் அடைவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், மற்ற சிலருக்கும் அதைப் பார்த்து கோபம் வருவது அர்த்தம் அற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்ற அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை என்பது தமிழ்நாட்டின் நூற்றாண்டு காலஅரசியல் வரலாற்றை மட்டுமல்ல; மொழிப்புலமை அறியாத தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

image

‘திராவிட’ என்பதை வடசொல் என்பது வேர்ச் சொல் அறியாதவர் கூற்றாகத்தான் இருக்க முடியும். ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’தேவநேயப் பாவாணர் அவர்கள், ‘திராவிடம்’ என்பது தமிழ்ச் சொல்லே என்று தான் நிறுவி உள்ளார். திரவிடம் என்பது தென் சொல்லே என்றுஅவர் நிறுவி உள்ளார். பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும், மொழிப் பெயர்களும் பெரும்பாலும் ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின.

ஈழம், கடாரம், சீனம், யவனம் தமிழம் -த்ரமிள (ம்) - த்ரமிடன் (ம்) -த்ரவிட (ம்) - திராவிட (ம்) - என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது - தவிள - தவிட - என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிலி தவிட என்னும் வடிவங்கள் த்ரமில,திரவிட, த்ரவிட என்று வடமொழியிற் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்கள் கூறுவர். எங்கனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை"" என்று எழுதிஇருக்கிறார் பாவாணர்.

image

தமிழ், திராவிடம், தென்மொழி என்னும் முப்பெயரும் ஒரு பொருட்சொற்களில் தமிழையே குறித்து வந்திருப்பினும் இன்றைய நிலைக்கேற்ப தமிழின் மூவேறு நிலைகளை உணர்த்தற்குரியனவாய் உள்ளன என்றும் சொன்னவர் அவரே. "திரவிட மொழிகளெல்லாம், முதற் காலத்தில் வேறுபாடின்றி அல்லது வேறு படுக்கப்படாது தமிழம் அல்லது திரவிடம் என ஒரே பெயரால் அழைக்கப் பெற்றமை" என்ற அவர், தமிழம் என்னும் பெயரே (த்ரமிளம் -த்ரமிடம் - த்ரவிடம்) திரவிடம் எனத் திரிந்தமை என்கிறார்.

தமிழ் - தமிழன் - தமிழ்நாடு - திராவிட மாடல் - நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன் என்று முதலமைச்சர் ஒலித்து வருவது இரண்டும் ஒரே பொருளைத் தருவதால்தான். இதில் குற்றம் காண எதுவும் இல்லை. வேறு குற்றம் காண முடியாதவர் வேண்டுமானால் ‘திராவிடக் குற்றம்’ கண்டு வருகிறார்கள். இதுதான் புரட்சிக் கவிஞர் - தமிழியக்கம் கண்ட பாவேந்தர் -பாரதிதாசன் அவர்களின் கூற்றுமாகும். "நான் ‘மூவேந்தர் நாடென’ நவில்வதும் தென் மறவர் நாடென்று செப்பலும் பழந்தமிழ் நாடெனப்பகர்வதும், இந்நாள் வழங்கு ‘திராவிடர் நாடென’ வரைவதும் ஒன்றே! அதுதான் தொன்று தொட்டு வென்ரு புகழோங்கு நம் அன்னைநாடு!

திராவிடம் தமிழ் மொழி: திராவிடம் என்று செப்பிய தேன் எனில் ‘திருத்தமிழம்’ எனும் செந்தமிழ்ப் பெயரை வடவர் திரமிளம் என்று வழங்கினர். திரமிளம், பிறகுதிராவிடம் ஆனது. வேட்டியை வடவர் வேஷ்டி எனினும் அவ்வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே! அதுபோல் திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால் இரண்டும் தமிழே என்பதில்ஐயமேன்!....உறுதி ஒன்று திராவிட மறவர் நாட்டை மீட்டு வாழ்வதே!" என்றுஎழுதினார் பாவேந்தர்! திருத்தமிழகத்தை மீட்டு வாழ்வதை, ஆள்வதைத்தான் ‘திராவிட மாடல்’ஆட்சி என்கிறார் முதலமைச்சர்.

image

"திராவிட மாடல் என்பது, அனைத்துசமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி! அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சியாக அது அமைய வேண்டும். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் -கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை -செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிடமாடல் வளர்ச்சி! என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்க இலக்கியத் தொகுப்பு என்பது வேறு, திராவிடக் களஞ்சியத் தொகுப்பு என்பது வேறு என தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ''சரியாக புரிந்துகொள்ளாததால் ஏற்பட்ட விளைவு தான் இது. சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வகையில் சங்க இலக்கிய தொகுப்பு உருவாக்கி தரப்படும். இது ஒன்று. அதேபோல மற்றொன்று, திராவிட களஞ்சியத்தை உருவாக்குவது. திராவிடத்தின் கொள்கைளை உருவாக்குவது.

உதாரணமாக, மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என பல கொள்கைகளை திராவிடம் முன்னெடுத்துள்ளது. இது குறித்து திராவிட இயக்கத்தின் ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பை உருவாக்குவது தான் திராவிட களஞ்சியம். எனவே இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

திராவிடக் களஞ்சியம் தொகுப்பு நூல் விவகாரத்தில் மக்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் சிலரது முயற்சி பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்