[X] Close

கிரிக்கெட் உலகின் பிதாமகன்: சச்சின் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் போற்றும் டான் பிராட்மேன்

சிறப்புக் களம்

Cricketing-Legend-Australia-Don-Bradman-celebrates-113th-birthday-today

கிரிக்கெட்டின் வரலாற்று பக்கங்களை இவரின் பெயர் இல்லாமல் ஒருபோதும் இருந்துவிடாது. கடந்த தலைமுறை தொடங்கி இப்போதிருக்கும் தலைமுறையினர் வரை இவரின் ரெக்கார்டுகளை உடைக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். அப்படிப்பட்ட ஓர் ஒப்பற்ற பேட்ஸ்மேன்தான் கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்றழைக்கப்படும் டான் பிராட்மேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிராட்மேனுக்கு இன்று 113 ஆவது பிறந்தநாள்.


Advertisement

image

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கூட்டமுந்தரா நகரில் கடந்த 1908 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தார். அதன்பின் அங்கிருந்து சிட்னி நகருக்கு இடம் பெயர்ந்து கிரிக்கெட் விளையாடிப் பழகி ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை இதுவரை எந்தநாட்டு பேட்ஸ்மேன்களும் முறியடிக்கவில்லை என்பதுதான் பெரும் அதிசயம். 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிராட்மேன், 6,996 ரன்கள் சேர்த்து தனது சராசரியை 99.94 என வைத்துள்ளார். இவரின் 21 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் 29 சதங்களை விளாசியியுள்ளார்.


Advertisement

image

கடந்த 1948 ஆம் ஆண்டு ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் பிராட் மேன் விளையாடியபோது, அவரின் டெஸ்ட் சராசரியை 100 சதவீதம் என்று உயர்த்திக்கொள்ள 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அந்த டெஸ்ட் போட்டியோடு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார். 338 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ள பிராட்மேன், 28 ஆயிரத்து 67 ரன்கள் குவித்து, 95.14 சராசரி வைத்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தனது 10 வயது வரை டான் பிராட்மேன் டென்னிஸ் விளையாட்டின் மீது காதலாக இருந்தார் என்பதுதான்.

image


Advertisement

கிரிக்கெட் உலகமே கொண்டாடும் டான் பிராட்மேன் பிப்ரவரி 2001 ஆம் ஆண்டு 25 தேதி இறந்தார். ஆனாலும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். பிராட்மேனை கெளரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு விஷயங்களை செய்துள்ளது. அதில் ஒன்று ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகம் தனது ஜிபிஓ பதவிட்டு எண்ணை 9994 ஆக தேர்வு செய்து, இதுவரை மாற்றாமல் வைத்துள்ளது. இந்த எண் பிராட்மேனின் ஆவரேஜான 99.94 (9994) ஐ குறிக்கும்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேஸர் ஒருமுறை நெல்சன் மண்டேலாவை சந்தித்துள்ளார். அப்போது மண்டேலா, உண்மையில் பிராட்மேன் உயிருடன் இருக்கிறாரா? என ஃப்ரேஸரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பிராட்மேனை பெருமைப்படுத்த ஆஸ்திரேலிய அரசு, அவர் புகைப்படத்துடன் தபால் முத்திரை வெளியிட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு பிராட்மேன் நூற்றாண்டு விழாவிற்கு 5 டாலர் மதிப்புடைய தங்க நாணயத்தை ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டது. பிராட்மேன் மறைந்து 8 ஆண்டுகளுக்குப்பின் 2009 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆப் பேமில் இடம் பெற்றார். மேலும், நைட்வுட் விருது வழங்கப்பட்ட முதல் ஆஸ்திரேலிய வீரரும் பிராட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

image

டான் பிராட்மேன் தான் வாழ்ந்த காலத்தில் நேரில் சந்திக்க விரும்பிய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. சச்சினின் பேட்டிங் குறித்து பிராட்மேன் கூறுகையில், "நான் சச்சின் பேட்டிங்கை தொலைக்காட்சியில் பார்த்தபோது, அவரின் பேட்டிங் முறையைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். உடனே நான் என் மனைவியை அழைத்து, இங்கு வந்து பார், என்னைப் போலவே ஒருவர் பேட்டிங் செய்கிறார் என்றேன். நான் ஒருபோதும் என்னுடைய பேட்டிங்கையும், நான் விளையாடும் விதத்தையும் பார்த்தது இல்லை என் மனைவியும் அதைப் பார்த்து ஆம், உங்களைப்போலவே பேட்டிங் செய்கிறார் என்றார். சச்சின் பேட்டிங் ஸ்டைல், ஸ்ட்ரோக் ஆடும் விதம், ஷாட்கள், கால்களை நகர்த்தி ஆடும் விதம் ஆகியவை என்னைப் போலவே இருந்தது" என்று பிராட்மேன் பெருமையாகத் தெரிவித்திருந்தார்.

image

இதனையடுத்து 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி டான் பிராட்மேனின் 90-வது பிறந்தநாளின் போது, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் கென்சிங்டன் பார்கில் உள்ள டான் பிராட்மேனின் இல்லத்தில் அவரை சச்சின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் பேட்டிங் ஸ்டையிலுக்கு ஒப்பாக அழைக்கப்படுவர் இந்தியாவின் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இந்த கருத்தை டான் பிராட்மேன் பெருமையாகத் தெரிவித்துள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் பலமுறை தன்னடக்கமாக அதை மறுக்கவும் செய்துள்ளார். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பிராட்மேனின் பிறந்தநாளின் போதும் சச்சின் அந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டரில் நினைவுக்கூறுவார்.

image

கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களால் பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை தங்களுடைய பார்ம் என்னாகும் என்ற கவலையை பகிர்ந்திருந்தனர். அப்போது அதற்கும் உதாரணமாக டான் பிராட்மேனை எடுத்துக்கொண்டு வீரர்களை ஊக்கப்படுத்தும்விதமாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் சச்சின். அதில் "சர் டான் பிராட்மேன் இரண்டாம் உலகப் போரின் காரணமாக பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க நேரிட்டது. ஆனாலும் இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆவரேஜ் எடுத்துள்ள பேட்ஸ்மேனாக அவர் திகழ்ந்தார். இப்போது பல மாதங்களாக விளையாட்டு வீரர்கள் விளையாட்டை தொடர முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் டான் பிராட்மேனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close