[X] Close

"என்னை மாட்டுக்கறி சாப்பிட வைத்தது சென்னைதான்! - சீமான் சிறப்புப் பகிர்வு | #MadrasDay2021

சிறப்புக் களம்

Naam-Tamilar-Katchi-chief-coordinator-Seeman-special-interview-about-chennai-day

இந்தியாவின் தலைநகர் டெல்லியாக இருந்தாலும் சமூக சீர்திருத்தங்களில், இந்தியாவிற்கே கில்லியாய் இருக்கும் சென்னை பல துறைகளில் பெருந்தலைகளை உருவாக்கி தலைநிமிர வைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு இன்று 382-ஆவது பிறந்தநாள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தினத்தையொட்டி நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்...


Advertisement

“சென்னை அறிமுகமானது, நான் நேசித்த திரைப்படத்துறையால்தான். சென்னை வரவில்லை என்றால் கட்டாயம் ராணுவத்தில் சேர்ந்திருப்பேன். என்னுடைய உறவினர்கள் எல்லோருமே ஆசிரியர் பணி, காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளில் இருக்கிறார்கள். அதனால், என்னுடைய அப்பா எப்படியாவது என்னையும் ராணுவத்தில் சேர்க்க விரும்பினார். ஆனால், எனக்கோ சென்னை வந்து சினிமாவில் சாதிக்கவேண்டும் என்பதே சிந்தனையாக இருந்தது. எனது மன ஓட்டத்தை அறிந்த அப்பா, நான் ராணுவத் துப்பாக்கியை கையிலேந்தவேண்டும் என்பதற்காக, எங்கக் குடும்ப ஜோசியரிடம் 80 ரூபாய் கொடுத்து ’அவனுக்கு இரும்புதான் ராசின்னு சொல்லுங்க’ என்று பொய் சொல்லச் சொன்னார். ஆனால், நான் அப்பாவையே முந்திக்கொண்டு ஜோசியருக்கு 100 ரூபாய் கொடுத்து எனக்கு ஆதரவாகப் பேசச்சொன்னேன். அவரும் ‘இரும்புதான் அவனுக்கு ராசின்னா கேமரா கூட இரும்புதான். அவனை நினைக்கிறத் துறையில விட்டுடுங்க’ன்னு சொல்லிட்டார்.

இப்படிப்பட்ட, சூழலையெல்லாம் கடந்துதான் கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் சென்னைக்கு 20 வயதில் பஸ் ஏறினேன். நான் வாழ்ந்த கிராம சூழலுக்கும் சென்னைக்கும் பெரிய வேறுபாடு இருந்தது. சென்னை விசாகப்பட்டினம் போல திட்டமிட்டுக் கட்டப்படாத நகரம். அதனால்தான், இட நெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ளது. ஆனாலும், வேறு வழியில்லாமல் நாம் நேசிக்கும் திரைப்படத்துறை இங்குதானே உள்ளது என்று வாழத்தொடங்கி விட்டேன்.


Advertisement

சென்னையில் நான் சந்தித்த அருமையான நண்பர் ’என்றும் அன்புடன்’ படத்தை இயக்கிய பாக்கியநாதன். அவரின் நட்புதான் எனக்கு சினிமாவில் சாதிக்க இன்னும் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. எல்லோரும் ஒன்றாகத்தான் வாய்ப்பு தேடுவோம். ஆரம்பத்தில் தங்குவதற்கு இடம் இல்லை. ஏவிஎம் ஸ்டூடியோவில் இரவு படுத்துத் தூங்கி, அங்கிருக்கும் கிணற்றில் காலையில் குளித்துக்கொள்வோம். சிலசமயம் கல்லறைகளில்கூட இடம் இல்லாமல் தூங்கியிருக்கிறேன்.

ஒவ்வொரு காலடித் தடத்திற்கும் வீரம் தேவைப்பட்டிருக்கு. அதுமாதிரி, ஒவ்வொரு காலடி தடத்தையும் பதிக்க நிறைய அவமானங்கள், ஏற்ற இறக்கங்கள், வலிகளைத் தாங்கவேண்டி இருந்தது. சென்னை எந்தச் சூழலில் இருந்ததோ, அதனோடு நான் என்னைப் பொருத்திக்கொண்டேன். மிதிவண்டிக் கடை வைத்திருக்கும் சேகர் என்பவர் வாய்ப்பு தேடிச் செல்லும்போது, எங்களுக்கு மிதிவண்டிக் கொடுப்பதோடு சாப்பாடும் வாங்கிக்கொடுத்து உதவுவார். அப்போல்லாம், ஒருவேளை உணவு கிடைத்துவிட்டாலே பெரிய விஷயம்தான். இப்படிப்பட்ட பாசக்கார மனிதர்கள் கிடைத்ததும் சென்னையில்தான்.

image


Advertisement

குறிப்பா, எனது உணவு முறையையே மாற்றிய முக்கியப் பங்கு சென்னைக்கு உண்டு. உணவுக்கான பணம் தீர்ந்ததும் அப்பாவுக்கு இரண்டே வரியில்‘சென்னையில் என்னைத் தவிர எல்லோரும் நலம்’ என்று கடிதம் அனுப்புவேன். உடனே, 200 ரூபாய் செலவுக்கு அனுப்புவார். நான் சென்னை வரும்போது ”மாட்டுக்கறி மட்டும் சாப்பிடக்கூடாது. மாடு நமக்கு தெய்வம். இந்த ஒரேயொரு விஷயம் மட்டும் பண்ணிடாதப்பா’ன்னு என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு அனுப்பினார் அப்பா. ஆனால், நான் சென்னை இறங்கியவுடன் மாட்டுக்கறிதான் சாப்பிட்டேன். குறைந்த விலையில் 1 ரூபாய்க்கு கிடைத்தது. என் கையில் பணம் இல்லாத நேரம் மட்டுமில்லை, இப்போதுவரை அப்பாவோட சத்தியத்தை என்னால காப்பாத்த முடியலை. ‘மாமாவுக்கு பண்ணிக்கொடுத்த சத்தியத்துக்காகவாவது சாப்பிடாம இருங்களேன்’என்பார் மனைவி. ‘மாட்டுக்கறியிலதான், அதிகமா புரதம் இருக்கு. ஜிம்முக்குப் போகும்போது அதெல்லாம் சாப்பிடணும்’ன்னு சொல்லிடுவேன். வாய்ப்பு தேடுன காலக்கட்டத்துல, ஒரு பிரட் பாக்கெட் வாங்கி ரெண்டு மூன்று நாளைக்கு வைத்துக்கொள்வோம். அப்போ, 1 ரூபாய் கொடுத்தோம்னா மாட்டுக்கறி கொடுப்பாங்க. அதுதான், எங்களோட பசியை தீர்த்து எனர்ஜியா வைத்திருந்ததோடு, ரெண்டு மூணு நாளைக்கு பசியையும் தாங்க வச்சது.

பின்பு, அடுத்தடுத்தக் காலக்கட்டங்களில் நான் கராத்தே பயிற்சியில் சேர்ந்தபோது உடல் ரொம்ப சோர்வடைந்தது. என்னதான் வழி என்று யோசித்தபோது மாட்டுக்கறிதான் தீர்வானது. நாளை கராத்தே வகுப்பு என்றால் முதல்நாளே நண்பர்களுடன் இணைந்து 1 கிலோ மாட்டுக்கறி சாப்பிட்டு தெம்பேற்றிக்கொண்டுச் செல்வோம். மாட்டுக்கறியில் 70 விழுக்காடு புரதம் இருக்கு. இவ்வளவு சத்து கொண்ட மாட்டுக்கறி சாப்பிடுவதற்கே சமூகத்தில் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், என்னை மட்டுக்கறி சாப்பிட வைத்து தெம்பூட்டி மேலும் பல சினிமா வாய்ப்புகளுக்கு அலைய வைத்தது சென்னைதான். இதுமட்டுமல்ல, சென்னையில் நம்ம கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இந்த சாதி கருமாந்திரமெல்லாம் கிடையாது. அந்த சாதி, இந்த சாதின்னு யாரும் பெருமையும் பேசமுடியாது. பேசவும் மாட்டாங்க. இங்கு சாதிக்கொரு சுடுகாடும் இல்லை. இப்படி சமத்துவங்களால் நிறைந்திருக்கும் சென்னையை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

image

அதேசமயம், சென்னையில் குடியேறினாலும் எனது மனது முழுக்க கிராமத்தில்தான் இருக்கும். ’உன் வாழ்க்கை 40 வயதுவரை ரொம்பக் கஷ்டமா இருக்கும்ப்பா. அதுக்கப்புறம், அதுவே பழகிடும்ப்பா’ என்பார்களே... அப்படித்தான், சென்னை வாழ்க்கை எனக்குப் பழகிடுச்சி. நான் எப்போதும் சென்னையில் செல்லும் இடம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடல்தான். அங்கு, வாழ்நாள் உறுப்பினராக இருக்கிறேன். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் என்பதால் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ஓடுவேன். அத்தனை மணிக்குக்கூட கூட்டம் கும்மியடிக்கும். என்னடா இது இப்போவும் கூட்டமா இருக்கேன்னு, இன்னும் சீக்கிரமா எழுந்து 3 மணிக்கு எழுந்து போவேன். ஆனா, அப்போவும் கூட்டமா இருக்கும். அந்தக் கூட்டத்திலேயே ஒரு மணி நேரம் மேல ஓடிட்டு வந்து அருகில் இருக்கும் சமோசா கடையில் தினம் ரெண்டு சமோசா வாங்கி சாப்பிடுவோம். அவ்ளோ சுவையா இருக்கும். அப்போதுதான், ஒருநாள் டாக்டர் கண்ணன் புகழேந்தி வந்து ‘10 கிலோ மீட்டர் ஓடி 200… 250 கலோரிதான் குறைச்சிருப்பீங்க. ஆனா, ஒரு சமோசாவுல 500 கலோரி இருக்கு. ஓடிட்டு... ஓடிட்டு தினம் இதைத்தான் பண்றீங்களாடா பாவிகளா’ என்றார். ’ஆறு மாசமா இதைத்தான் நாம பண்ணிக்கிட்டிருக்கோமா?’ என்று அதிர்ச்சியாகி சமோசா சாப்பிடுவதையே நிறுத்தினோம். இந்த சம்பவங்கள் நகைச்சுவையாக இருந்தாலும் எப்போதும் மறக்கமுடியாத ஸ்வீட் மெமரீஸை சென்னைதான் கொடுத்தது.

சென்னைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. நான் வந்தபோது கட்டிடங்கள் குறைவுதான். திருவிழாவில் தொலைந்துபோன குழந்தை மாதிரி சினிமா மீது இருந்த வெறியால் சென்னைக்கு வந்துவிட்டேன். ’சென்னைக்குப்போய் சினிமாவில் தோற்றுவிட்டான்’என்ற தலைகுனிவு வந்துவிடக்கூடாது என்று வைராக்கியத்துடன் இங்கேயே போராடி சாதித்தும் காட்டினேன். நான் பணியாற்றும் சினிமா, அரசியல் இரண்டின் தலைமை இடமாகவும் சென்னைதான் இருக்கிறது. அதனால், சென்னை என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாய் மாறிப்போய்விட்டது” என்று நெகிழ்ச்சியுடன் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ’சென்னை மக்களுக்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்புவது என்ன?’ என்று கேட்டோம்...

“சென்னை அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மேலிருந்து குப்பையை வீசுவது, ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடையில் குப்பையைக் கொட்டுவது என்று இருக்கிறார்கள். குப்பையைக் கூட கொட்டத் தெரியாத நாடு குப்பை மேடாகத்தான் அமையும். நாடாக இருக்காது. சென்னையில் வாழும் மக்களுக்கு இந்த விழிப்புணர்வு முக்கியமாகத் தேவைப்படுது. சென்னை பெருவெள்ளத்தின்போது 30 நாள் மக்களோடு மக்களாக இருந்து வேலை செய்தோன். அப்போ, பல இடங்களில் குப்பையெல்லாம் கூட்டி பெருக்கினோம். என்ன கொடுமைன்னா நான் கூட்டிக்கிட்டிருக்கும்போது, என் தலைமேல குப்பையை மேலிருந்து கொட்டுகிறார்கள். ’பிள்ளைகள் குப்பையை கூட்டி பெருக்குகிறார்களே... கீழிறங்கிக் கொட்டுவோம்’ என்று நினைக்கவில்லை” என்று மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சீமான்.


Advertisement

Advertisement
[X] Close