Published : 19,Aug 2021 08:18 PM
'இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்' என பெயர் மாற்றம் : தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என மாற்றியுள்ள தலிபான்கள், ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சியமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், முக்கிய நகரங்களை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள், கடந்த 15-ம் தேதி தலைநகர் காபூலை பிடித்து இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை தங்கள் வசம் கொண்டுவந்தனர். இதையடுத்து, ஆப்கான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசல், அதனை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் விமான சக்கரங்களில் பயணித்து கீழே விழுந்தவர்கள் என நான்கு நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் ஆப்கானில் இருந்து தப்பிக்க முயன்று உயிரை விடுவதற்கு பதிலாக வீடுகளுக்குள்ளேயே இருக்கலாம் என்றும் தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுதவிர, தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தலிபான் கொடியை அகற்றிவிட்டு, ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றினர். இதுதொடர்பான துப்பாக்கிச்சூட்டிலும் சிலர் பலியாகியுள்ளனர்.
போராட்டங்களுக்கு மத்தியில் ஆப்கானில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் அது தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆட்சி குறித்தும் அதிகாரம் குறித்தும் தலிபான்களின் மூத்த தலைவர் ஷாஷிமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஷரியத் சட்டத்தின் அடிப்படையில்தான் அரசியல் அமைப்பு இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்போது அதுகுறித்து விவாதிக்க என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என தலிபான்கள் பெயர் மாற்றியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என்ற பெயரில்தான் தலிபான்கள் ஆட்சி செய்து வந்தனர். செப்டம்பர் 2001இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்க படைகள் ஆட்சியை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் என பெயரை மாற்றியது.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் நாட்டைவிட்டு தப்பியோடி ஐக்கிய அரபு ஆமீரகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் அதிபர் அஷ்ரப் கனி, தான் பெட்டி நிறைய பணத்துடன் வெளியேறியதாக தகவல்களை மறுத்துள்ளார். அணிந்திருந்த உடை, காலணி தவிர வேறு எதுவும் தன்னிடம் இல்லை எனவும் அஷ்ரப் தெரிவித்ததாக நியூயார்க் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆனால் 1,255 கோடி ரூபாய் அரசு பணத்தை அஷ்ரப் கனி திருடிச் சென்றுவிட்டதாக, தஜகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கானிஸ்தான் தூதர் முகமது ஜாகீர் அக்பர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.