[X] Close

'தலிபானை எப்படி கையாள்வது' - ஆப்கன் பிரச்னையும், சமூக ஊடக நிறுவனங்கள் சிக்கலும்!

உலகம்,சிறப்புக் களம்

Will-there-be-freedom-of-expression-is-an-issue-with-Afghanistan-and-social-media-companies-are-troubling

ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான் வசமாகி இருக்கிறது. எதிர்ப்பே பெரும்பாலும் இல்லாமல் இது எப்படி நிகழ்ந்தது? இந்த நிலைக்கு யார் பொறுப்பு? எனும் கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, இனி ஆப்கன் மக்களின் நிலை என்ன? எனும் கேள்வியே அதிகம் வாட்டுகிறது.


Advertisement

image

இன்னும் பல கேள்விகள் ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு எழும் நிலையில், முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் தலிபானை எப்படி கையாளப் போகின்றன எனும் கேள்வியும் எழுகிறது.


Advertisement

ஆப்கானிஸ்தானை எதிர்பார்த்ததை விட மிக வேகமாக தலிபான்கள் கைப்பற்றியிருப்பது, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியிருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் தலிபான்கள் சமூக ஊடக மேடைகளில் உருவாக்கி பகிரும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த சவால் எழுந்திருக்கிறது. 

அதிலும் குறிப்பாக, தலிபான்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஆதரவு திரட்டவும் சமூக ஊடக மேடைகளை பயன்படுத்துவதில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பின் சமூக ஊடக உள்ளடக்கத்தை கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும் சவாலாக மட்டும் அல்ல, பெரும் பிரச்சனையாகவே இருக்கும் என கருதப்படுகிறது. 


Advertisement

image

அதோடு தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் சூழலில் அந்த அமைப்பின் சார்பாகவும், அதற்கு ஆதரவாகவும் சமூக ஊடக மேடை பயன்படுத்தப்படுவதை எதிர்கொள்வது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. 

இந்த பின்னணியில் பேஸ்புக், தனது மேடையில் தலிபான்கள் தொடர்பான உள்ளடக்கம் தொடர்ந்து தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

தலிபான் அமைப்பு அமெரிக்க சட்டத்தால் தடை விதிக்கப்பட்ட அமைப்பு என்பதால், அதன் சார்பாக அல்லது ஆதரவாக நடத்தப்படும் கணக்குகளை நீக்குவோம் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தலிபான் தொடர்பான உள்ளடக்கத்தை கண்காணிப்பதற்காக பிரத்யேகமான ஆப்கானிஸ்தான் வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனம், தீவிரவாதம் அல்லது பொதுமக்களுக்கு எதிரான வன்முறை கருத்துக்களை பரப்பும் கணக்குகளை தடை செய்வதாக தெரிவித்துள்ளது.

எனினும், தீவிரவாத குழுக்கள் என வரையறுப்பதில் இணைய நிறுவனங்கள் ஒரே சீரான அளவுகோளை பின்பற்றுவதில்லை என்பது சிக்கலாக இருக்கிறது. 

தலிபான் தொடர்பான வீடியோக்கள் நீக்கப்படும் எனும் கேள்விக்கு யூடியூப் நேரடியாக பதில் அளிக்காமல், அமெரிக்க அரசு வெளியிடும் தீவிரவாத குழுக்கள் வரையறையை பின்பற்றுவதாக மட்டும் தெரிவித்துள்ளது. 

தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால், ஆப்கானிஸ்தானில் கருத்து சுதந்திரமும், பெண் சுதந்திரமும் பெருமளவு பாதிக்கப்படலாம் எனும் அச்சம் எழும் நிலையில், சமூக ஊடகங்களும் முழு அளவில் ஒடுக்கப்படும் அபாயம் இருக்கிறது. 

image

அதே நேரத்தில், சமூக ஊடக மேடைகளை தலிபான்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பெரும் நகை முரணாகவே அமைகிறது.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக மேடைகள் பெரும் செல்வாக்குடன் திகழும் நிலையில், சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் மற்றும் தீவிரவாத உள்ளடக்கத்தை இந்நிறுவனங்கள் கையாண்டு வரும் விதம் விமர்சனத்திற்கு உரியதாகவே அமைகிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சை வெடித்த போது, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்பின் கணக்கை முடக்கும் அளவுக்கு பேஸ்புக்கும், ட்விட்டரும் சக்தி வாய்ந்த நிறுவனங்களாக இருந்தன. அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் ஹில் பகுதியில் நிகழ்ந்த வன்முறை பெரும்பாலும் பேஸ்புக் போன்ற மேடைகள் மூலம் திட்டமிடப்பட்டதாகவும், இதை டிரம்ப் தூண்டியதாகவும் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவரது கணக்கை முடக்கும் முடிவு என்பது வெகுஜன மனநிலை சார்ந்ததாகவே அமைந்ததிருந்ததோடு, இதை மேற்கொள்வதும் பேஸ்புக்கிற்கு எளிதாக இருந்தது. 

ஆனால், ட்ரம்ப் ஆட்சியில் இருந்த போது இது போன்ற முடிவை எடுக்கும் துணிவு பேஸ்புக்கிற்கு வந்திருக்குமா? எனும் கேள்விக்கான பதில் எல்லோரும் அறிந்ததே. 

பொதுவாகவே இணைய நிறுவனங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமாக வளைந்து கொடுக்கின்றன மற்றும் தங்கள் கொள்கைகளை வளைய வைக்கின்றன எனும் குற்றச்சாட்டு இருக்கிறது. 

இதே போல மியான்மரிலும் ராணுவ ஆட்சி தொடர்பான சமூக ஊடக கணக்குகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரின் மீது வன்முறையை பரப்பும் கணக்குகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பேஸ்புக் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்தியாவில் ட்விட்டர் சர்ச்சையில் சிக்கித்தவித்து வருவது நன்கறிந்ததே. 

ஆக, தலிபான்கள் செயல்பாட்டை உலகம் எப்படி கட்டுப்படுத்தப் போகிறது எனும் கேள்வியோடு, அந்த அமைப்பின் சமூக ஊடக உள்ளடக்கத்தை இணைய நிறுவனங்கள் எப்படி கட்டுப்படுத்த போகின்றன எனும் கேள்வியும் முக்கியமானது.

இதனிடையே, ‘நாங்கள் மாறி விட்டோம்’ என தலிபான்கள் கூறி வருவதும் புதிய சிக்கலை ஏற்படுத்துகிறது. பேச்சளவிலும், அணுகுமுறையிலும் தலிபான்கள் நிச்சயம் மிதமான போக்கை கடைப்பிடித்து வருவதாக கருத இடமிருக்கிறது. முன் போல, அடக்குமுறை இருக்காது என தலிபான்கள் சொல்லி வந்தாலும், அந்த அமைப்பின் அடிப்படை நம்பிக்கைகளும், கொள்கைகளும் எந்தவிதத்திலும் மாறிவிடவில்லை என்பது அச்சம் தரக்கூடியதே. 

ஆட்சிக்கு வந்திருக்கும் தலிபான்கள் ராஜாங்க அணுகுமுறையை கடைப்பிடித்தபடி அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அதே நேரத்தில் சமூக ஊடகத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முற்பட்டால், அதை சமூக ஊடகங்களுக்கு வந்த சோதனை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான்கள் வசமான போது, அங்குள்ள சூழலையும் பதற்றத்தையும் சமூக ஊடக பகிர்வுகளே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. ஆனால், இந்த சுதந்திரம் தொடருமா என்பது தெரியவில்லை. 

உலகம் முழுவதும் எண்ணற்ற சந்தர்பங்களில், சமூக ஊடக மேடைகள் தணிக்கைக்கு மீறிய செய்திகளையும், தகவல்களையும் உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளன. இப்போது கூட, ஆப்கானிஸ்தான் அப்பாவி மக்களின் பரிதாப நிலை குறித்தும், இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் காரணம் என்பதையும் விளக்கும் வகையிலான குறும்பதிவுகள் ட்விட்டரில் வெளியாகி வருகின்றன.

அதே போல, ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் இரட்டை வேடம் போட்டு தலிபான்களை ஆதரித்து ஆட்சிக்கு வர வழிவகுத்த பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் தீவிரமாக உள்ளது.

ஆனால், பிரச்சனையின் மையமாக ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களை சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என தெரியாத நிலையில், அந்த மக்களை ஒடுக்கும் ஒரு அமைப்பின் கைகளில் சமூக ஊடகங்கள் ஒரு கருவியாகிவிடாமல் இருப்பதை தடுப்பது எப்படி என்பது நம் காலத்து கேள்வியாகவே எழுகிறது.

- சைபர்சிம்மன்


Advertisement

Advertisement
[X] Close