Published : 16,Aug 2021 04:01 PM

மதத்தை முன்வைத்து மலையாள சினிமாவில் சர்ச்சை... 'ஈஷோ' பெயரால் எழுந்த சிக்கல்!

Malayalam-film-Eesho-become-controversy-Kerala-Catholics

கேரளாவில் மதத்தை முன்வைத்து 'ஈஷோ' என்று தலைப்பிடப்பட்ட மலையாள படத்தால் எழுந்துள்ள சர்ச்சைகள், கடந்த ஒரு வார காலமாக ஓயாமல் இருந்து வருகிறது. அதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்.

மலையாள நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரான இயக்குநர் நாதிர்ஷா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஈஷோ'. ஈஷோ என்பது இயேசுவின் பெயரைக் குறிக்கும் சொல் என்பதால் கேரளாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயசூர்யா மற்றும் நமீதா பிரமோத் நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு இயேசு கிறிஸ்துவின் மீதான தங்கள் நம்பிக்கையை அவமதிப்பதாக கூறுகிறார்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இந்த எதிர்ப்பு கிளம்ப தொடங்கியது, படத்தின் இரண்டாவது மோஷன் போஸ்டர் வெளியான ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு பிறகே. படத்தின் டைட்டில் 'ஈஷோ' என்பதோடு அதன் டேக் லைனாக 'பைபிளிலிருந்து இல்லை' என்ற வரிகள் சர்ச்சையைத் தூண்டியது.

image

இதனால், ஒருகட்டத்தில் நீதிமன்றத்தை நாடியது கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள். என்றாலும், இதில் பின்னடைவு ஏற்பட்டது. ரிலீஸுக்கு முன் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரியும் அவர்கள் மனுதாக்கல் செய்தனர். ஆனால், கேரளா உயர்நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது. என்றாலும், படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் பெருகி வருகிறது. ஒட்டுமொத்த கேரள மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 19 சதவீதம் இருக்கின்றனர். இதில் கத்தோலிக்கர்கள் கணிசமான அளவில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில்தான் கேரள கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகளில் முக்கியமானவையாக கருதப்படும் கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் மற்றும் அகில கேரள கத்தோலிக்க காங்கிரஸ் ஆகிய இரண்டும் இந்த விவகாரத்தில் தீவிரமாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இதில் கத்தோலிக்க காங்கிரஸ் என்ற அமைப்பு, கேரள தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்த, முன்னாள் எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் என்பவர் 'ஈஷோ' பெயரிலேயே படம் வெளியாகுமானால், படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றுள்ளார்.

அதேநேரத்தில், இந்த திரைப்படத்தின் இயக்குநர் நாதிர்ஷாவோ, `` 'ஈஷோ' படம் எந்த வகையிலும் இயேசுவை இழிவுபடுத்தவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமே 'ஈஷோ'. இது ஒரு த்ரில்லர் படமே தவிர, இயேசு கிறிஸ்துவை எந்த வகையிலும் தொடர்புபடுத்தவில்லை. தேவையில்லாத சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சர்ச்சைகளை தாண்டி திரைப்படத்தைப் பார்க்குமாறு நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். படத்தை பார்த்த பிறகு நான் அவர்களின் நம்பிக்கையை புண்படுத்தியிருந்தால் என்னை தூக்கிலிடவும் செய்யுங்கள்" என்றவர், படத்தின் டைட்டிலை மாற்ற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

image

தொடர்ந்து பேசியவர் ``படத்தில் மதம் சம்பந்தபட்ட எந்தக் காட்சிகளும் இல்லை. அதனால் படத்தின் பெயரை மாற்றப்போவதில்லை. பெயரை மாற்றினால், அது மலையாள சினிமா வரலாற்றில் மோசமான வழக்கமாகிவிடும். சர்ச்சைகளுக்கு பிறகு கத்தோலிக்க பாதிரியார்கள் குழுவை படம் பார்க்க அழைத்திருந்தேன். அவர்கள் படத்தைப் பார்த்த பிறகும் கூட தலைப்பை மாற்ற வேண்டும் என்றார்கள். இதைத்தான் நானும் சொன்னேன். எனவே, படம் வெளியானவுடன் சர்ச்சை முடிந்துவிடும் என்று நம்புகிறேன்" என்றுள்ளார்.

இயக்குநரின் விளக்கத்திற்கு பின்பும் கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள், ``இந்தப் படம் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தும் முயற்சி. கத்தோலிக்கர்களை இழிவுபடுத்த வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், கேரள நெட்டிசன்கள் தரப்பும், சினிமா தொழில்நுட்ப அமைப்புகளும் இயக்குநர் நாதிர்ஷா தரப்புக்கு ஆதரவாக இருக்கின்றனர். `வட இந்தியாவில் நிலவுவது போன்று சினிமாவில் மதங்களை புகுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமா என்பது மதசார்பற்ற ஒரு மீடியம். படத்தின் இயக்குநர் ஓர் இஸ்லாமியர் என்பதால், அவரை முன்வைத்து மதத்தை தூண்ட சில சக்திகள் முயன்று வருகின்றன" என்று கூறி நெட்டிசன்கள் பலரும் நாதிர்ஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படி மதத்தை முன்வைத்து மலையாள சினிமாவில் எழுந்துள்ள இந்த சர்ச்சைகள் கடந்த ஒருவார காலமாக ஓயாமல் இருந்து வருகிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்