Published : 11,Aug 2021 07:40 PM

ஒலிம்பிக்கில் இதுவரை ஏன் கிரிக்கெட் இடம் பெறவில்லை? - வரலாறும்.. எதிர்காலமும் : ஒரு பார்வை

Why-is-Cricket-Sport-not-included-in-the-Olympics-and-the-reason-was-explained-here-and-ICC-all-set-to-introduce-Cricket-in-Games-as-a-comeback-sport

கால்பந்து விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலக மக்களிடையே மிகவும் பிரபலமான விளையாட்டு எதுவென்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான். இப்படி உலக அளவில் ‘ஃபேமஸ் ஸ்போர்ட்’ -டாக இருந்தும் ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட் இடம் பெறவில்லை. ‘ஒலிம்பிக்குல மட்டும் கிரிக்கெட் இருந்திருந்தா இந்தியா தங்கம் இல்லன்னா வெள்ளி இல்லன்னா குறைஞ்சபட்சம் வெண்கலப் பதக்கமாவது வென்றிருக்கும்’ என இந்தியா பதக்கப் பட்டியலில் பின்தங்கி இருப்பதை பார்க்கும் போது ஒவ்வொரு இந்தியரின் மைண்ட் வாய்ஸிலும் இது தான் ஓடிக் கொண்டிருக்கும். 

இப்போது அந்த குரல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) காதுகளுக்கு எட்டியுள்ளது. 

image

“ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்துள்ளோம். வரும் 2028 -இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கை அதற்கான இலக்காக முடிவு செய்து, முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். அது நடந்தால் அந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு நிகழ்வாக இருக்கும்” என ஐசிசி தெரிவித்துள்ளது. 

ஒலிம்பிக்கில் ஏன் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெறவில்லை?

ஒலிம்பிக் போட்டிகள் மாடர்ன் ஒலிம்பிக்காக கடந்த 1896 முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட இருந்ததாம். இருப்பினும் எந்த அணிகளும் பங்கேற்க முன்வராததால் அது கைவிடப்பட்டுள்ளது. 1990 பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. அதில் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் மாதிரியான அணிகள் இடம் பெற்றுள்ளன. இறுதி நேரத்தில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் பின் வாங்கிக் கொள்ள பிரிட்டனும், பிரான்ஸ் அணியும் விளையாடின. அதில் பிரிட்டன் வெள்ளியையும், பிரான்ஸ் வெண்கல பதக்கத்தையும் பெற்றது. இதைவிட வினோதமாக கிரிக்கெட் விதிகளுக்கு மாறாக 12 வீரர்கள் அந்த போட்டியில் விளையாடி உள்ளனர். மேலும் கலந்து கொண்ட விளையாடிய வீரர்களுக்கு அவர்கள் ஒலிம்பிக்கில் விளையாடியதை பின்னர் தான் தெரிந்துக் கொண்டனர். அது ஏதோ காட்சி தொடர் என்று தான் வீரர்கள் விளையாடி உள்ளார்கள். 

அதன் பிறகு கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பெறவே இல்லை. அதற்கு காரணமாக சொல்லப்பட்டது இந்த போட்டியை நடத்துவதற்கான நாட்கள். ஆனால் அது வெளிப்படையாக சுட்டி காட்டப்படவில்லை. 

ஒருநாள் கிரிக்கெட் பார்மெட் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமாகி இருந்தது. 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் டி20 கிரிக்கெட் பார்மெட் அறிமுகமாகி இருந்தது. 1971-க்கு முன்பு வரை கிரிக்கெட் என்றால் அது ஐந்து நாட்கள் நடக்கின்ற டெஸ்ட் போட்டிகள் என்ற நிலையே இருந்தது. 

image

ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்?

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை காட்டிலும் மிக குறுகிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படும் டி20 கிரிக்கெட் பார்மெட் ஒலிம்பிக் களத்திற்கு ஏற்ற விளையாட்டாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலும் ஒலிம்பிக் மூன்று வார காலம் மட்டுமே நடத்தப்படுகிறது. அதனால் அந்த டைம் டியுரேஷனுக்குள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு டி20 பார்மெட் தான் சரியாக இருக்கும் என்கின்றனர் கிரிக்கெட் விளையாட்டு ஆர்வலர்கள்.  

image

வேலையை தொடங்கிய ஐசிசி!

ஐசிசி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது. 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மாதிரியான முக்கிய தொடர்களை ஐசிசி நடத்தி வருகிறது. வரும் 2023 வரையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணைகள் கிட்டத்தட்ட முடிவாகி விட்ட காரணத்தினால் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை பிரான்ஸ் நாட்டில் ஏற்படுத்துவது எல்லாம் சவாலானதாக இருக்கும். அதையெல்லாம் கணக்கிட்டு பார்த்த ஐசிசி 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை குறிவைத்துள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டு இப்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல் லீக் தொடரில் 2020 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட அமரிக்காவின் அலி கான் தேர்வாகியிருந்தது அதற்கு ஒரு உதாரணம்.

2032 ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெற உள்ளது. அங்கு கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக்கில் நடத்த எந்தவித சிக்கலும் இருக்காது. அதனால் விரைவில் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறும் என எதிர்பார்ப்போம். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்