Published : 30,Jul 2021 01:28 PM

ஒலிம்பிக்கில் தோல்விதான், ஆனாலும் படிப்படியான முன்னேற்றம் - தீபிகா குமாரி கடந்து வந்த பாதை

Indian-women-archer-Deepika-Kumari-consistently-improved-her-chances-in-Olympics-event

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை பிரிவில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் தீபிகா குமாரி காலிறுதிப் போட்டியில் 6-0 என்ற புள்ளி கணக்கில் தென் கொரிய வீராங்கனையிடம் தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது. ஆனால் தீபிகா குமாரி பங்கேற்கும் 3ஆவது ஒலிம்பிக் இது. அவர் ஒலிம்பிக்கில் கடந்து வந்த பாதையை பார்த்தால் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் அவர் முன்னேறிக் கொண்டே வந்திருக்கிறார்.

தீபிகா குமாரி முதல் முறையாக 2012 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்றார். ஆனால் அந்த ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார். பின்பு 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் வெளியேறி பதக்கத்தை தவறவிட்டார். டோக்கியோவில் நிச்சயம் அரையிறுதி சென்று பதக்கத்தை தட்டிப்பறிப்பார் என நினைத்த வேளையில் காலிறுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

image

ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல தவறினாலும் இப்போது காலிறுதி வரை வில்வித்தை பிரிவில் வித்தையை காட்டியிருக்கிறார் தீபிகா. 2024 பிரான்ஸ் தலைநர் பாரிசில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் தீபிகா பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் அதற்கான பயிற்சிகளை தொடர்வார் என சொல்லலாம். ஆம், ஏனென்றால் தீபிகாவின் வாழ்க்கை அப்படிப்பட்டது. அவர் கடுமையான முயற்சிகளை செய்ததால்தான் இத்தகைய உயரத்தை அடைந்திருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் அவர் வென்றுள்ள தங்கம் மீண்டும் ஒலிம்பிக் பதக்கத்தை அவர் வெல்வார் என்ற நம்பிக்கையை விதைத்து என்பது மறுக்க முடியாத விஷயம். அந்தத் தொடரில் ஒரே நாளில் வில்வித்தையில் ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை வென்று சாதித்தார். தீபிகா குமாரி. குறிப்பாக ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் மீண்டும் சர்வதேச அரங்கில் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை என்ற அந்தஸ்தை எட்டியவர் தீபிகா.

image

தீபிகா குமாரி "ஒரு பிளாஷ்பேக்"

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராத்து சட்டி (Ratu Chatti) என்ற கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா. தீபிகாவின் தந்தை ஷிவ்நாராயண் மஹாதோ வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வந்துள்ளார். அவரது தாய் கீதா, செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். 11 வயதில் மாங்காயை டார்கெட்டாக செட் செய்து வில்வித்தை பயிற்சியை தொடங்கியுள்ளார். அதற்காக மூங்கிலாலான வில் மற்றும் அம்புகளை அவரே வடிவமைத்துள்ளார். அவருக்கு அந்த வித்தையை கற்றுக் கொடுத்தவர் அவரது உறவுக்கார பெண் வித்யா குமாரி. டாடா வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வந்துள்ளார் வித்யா. நாளடைவில் புரபஷனலாக வில்வித்தை பயிற்சி பெற வேண்டுமென தீபிகா விரும்பியுள்ளார்.

ஆரம்ப நாட்களில் தீபிகாவின் வில்வித்தை பயிற்சிக்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தை திரட்ட முடியாமல் அவரது பெற்றோர் திகைத்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு அர்ஜூன் வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேர்ந்துள்ளார். ஒரே ஆண்டில் தனது திறனை நிரூபித்து டாடா வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு அவர் வீட்டுக்கே திரும்பவில்லை. கேடட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 2009இல் வென்ற பிறகே வீட்டுக்கு திரும்பினார்.

image

அதன் பிறகு அவரது வாழ்வில் அனைத்தும் ஏறுமுகம்தான். 2010 தொடங்கி காமன்வெல்த், ஆசிய விளையாட்டுகள், ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், உலக கோப்பை மற்றும் உலக சாமியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று சாதித்தவர் தீபிகா. ஒலிம்பிக் பதக்கம் மட்டும் நழுவிக் கொண்டே செல்கிறது. நிச்சயம் அடுத்த தொடரில் ஒலிம்பிக் பதக்கத்தையும் அவர் வசப்படுத்துவார் என்று நம்புவோம்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்