Published : 07,Jul 2021 07:03 PM
மத்திய அமைச்சராக பதவி ஏற்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனின் பின்னணி!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் விரிவு செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில் அமைச்சராக அங்கம் வகிக்கிறார் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன். அண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
யார் இவர்? - கடந்த 1977 இல் பிறந்தவர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் உள்ள கோனூரை சேர்ந்தவர். பட்டியலினத்தை சார்ந்தவர். முதுகலை சட்டப்படிப்பு முடித்த இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.
முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தமிழ் மொழி உட்பட மூன்று மொழிகள் தெரிந்தவர். இளம் வயதில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) தன்னை இணைத்துக் கொண்டவர். அங்கிருந்து தனது அரசியல் வாழ்க்கை பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
கடந்த 2020 மார்ச் வாக்கில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கட்சி உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப்பட்டது.
வேல் யாத்திரை!
தமிழ்நாடு பாஜக தலைவராக எல்.முருகன் தலைமை தாங்கிய நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று வேல் யாத்திரை. திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் இந்த யாத்திரை பயணத்தை முடிப்பதுதான் அந்த கட்சியின் திட்டம். இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து இந்த யாத்திரையை நடத்துவதாக பாஜக தரப்பு சொல்லியிருந்தது.
கொரோனா தொற்று பரவலை அபாயத்தை கருத்தில் கொண்டு அப்போதையை தமிழ்நாடு அரசு இதற்கு தடை விதித்த போதும் அதை உடைத்தெறிந்து மாநில தலைவர் முருகன் தலைமையில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் இது சார்ந்த செய்திகள் வைரலாக பரவின.
2021 சட்டப்பேரவை தேர்தல்!
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நாகர்கோவில், கோவை தெற்கு, திருநெல்வேலி, மொடக்குறிச்சி என நான்கு தொகுதிகளில் பாஜக வென்றது. தமிழ்நாடு மாநில தலைவர் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் அவர் தற்போது மத்திய அமைச்சராகி உள்ளார்.