[X] Close

'உளவு பார்ப்பதில் நிபுணர்'... - சிபிஐ புதிய இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் யார்?!

இந்தியா,சிறப்புக் களம்

who-is-new-cbi-director-Subodh-Kumar-Jaiswal

'உளவு பார்ப்பதில் நிபுணர்' என அறியப்படும் சிபிஐ புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் யார், அவரது பின்புலம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.


Advertisement

சி.பி.ஐ. இயக்குநர் பதவி கடந்த 3 மாதங்களாக காலியாக இருந்த நிலையில், தற்போது சி.பி.ஐ. புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா ஓய்வுபெற்ற பின் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. கூடுதல் இயக்குநர் பிரவீன் சின்ஹா கூடுதல் பொறுப்பாக அந்தப் பதவியை வகித்து வந்தார்.

image


Advertisement

இதையடுத்துதான் புதிய சி.பி.ஐ. இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுத்துள்ளனர்.

யார் இந்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால்?

1962-ல் மகாராஷ்டிராவின் தன்பாத் மாவட்டத்தில் பிறந்த ஜெய்ஸ்வால், பி.ஏ ஹானர்ஸ் மற்றும் எம்பிஏ மேல்படிப்பு படித்துள்ளார். 1985-ம் ஆண்டு மகாராஷ்டிரா பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி இந்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால். மற்ற காவல்துறை அதிகாரிகள் போல் இல்லாமல் ஜெய்ஸ்வால், உளவு பணியில் கொஞ்சம் கில்லி. இதற்கு காரணம் அவரின் உளவுத்துறை அனுபவம்தான்.


Advertisement

ஆரம்பத்தில் சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு காவல்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்துடன் இந்திய உளவு அமைப்பான "ரா"வில் பணியாற்ற வாய்ப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து மற்றொரு உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் ப்யூரோ (ஐ.பி)-ல் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உளவுப்பணிகளை கவனித்து வந்தார்.

இதன்பின் மீண்டும் மாநில காவல்பணிகளுக்கு திரும்பிய ஜெய்ஸ்வால், மும்பை காவல் துறை ஆணையராக 2018 - 2019 ஆண்டில் பணியாற்றினார். இந்த காலகட்டம்தான் அவரை தற்போதுள்ள நிலைக்கு உயர வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில், மகாராஷ்ட்ராவை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியில் மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் பதவி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்தது. இந்தப் பதவியில் இருந்த சில மாதங்களிலேயே மீண்டும் மத்திய அரசு பணிக்கு அழைத்துக்கொள்ளப்பட்டார். அதன்படி, தற்போது வரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் பதவியை வகித்த வந்த ஜெய்ஸ்வால் தற்போது சிபிஐ இயக்குநர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

image

உளவுத்துறைகளில் பணியாற்றியபோது எந்த அளவுக்கு புகழ்பெற்றாரோ, அதேஅளவு மகாராஷ்டிரா காவல் பணி இருக்கும்போதும் பெற்றார் ஜெய்ஸ்வால். இவர் மகாராஷ்டிரா காவல் பணி இருக்கும்போதுதான் இந்தியாவை அதிரவைத்த டெல்லி முத்திரைத்தாள் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அந்த வழக்கு சிபிஐ வசம் செல்லும் வரை புலனாய்வு செய்தது ஜெய்ஸ்வால்தான்.

அதேபோல், 2008-ல் மகாராஷ்டிரா காவல்துறையின் உளவுத்துறை தலைமை அதிகாரியாக பதவி வகித்த காலத்தில்தான் இந்தியாவை அதிரவைத்த மற்றொரு சம்பவமான மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய அமெரிக்க புலனாய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் முக்கியமானவர் இதே ஜெய்ஸ்வால்தான். அப்போது திரை மறைவில் இருந்துகொண்டு புலனாய்வு செய்து குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க உதவினார் அவர்.

மேலும், மகாராஷ்டிராவில் கருப்புப் புள்ளியாக அமைந்த பீமா கோரேகான் வன்முறை வழக்குகள் தொடர்பரான விசாரணையும் இவரின் தலைமையிலேயே நடந்தது. ஆனால், எப்போதெல்லாம் இவரின் தலைமையில் மகாராஷ்ட்ரா காவல்துறை புலனாய்வு செய்த வழக்குகள் சர்ச்சையை சந்திக்கிறதோ அதற்கடுத்த சில மாதங்களில் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் ஒன்று உளவுப் பணி அல்லது மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளப்படுவது வாடிக்கையாக இருந்துவந்துள்ளது.

இதற்கிடையே, சிபிஐ இயக்குநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட ஒரு காவல்துறை அதிகாரிக்கு, ஊழல் எதிர்ப்பு வழக்குகள், உளவு சார்ந்த பணிகள் போன்றவற்றில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அந்தவகையில் பார்க்கையில் ஜெய்ஸ்வால் உளவு பிரிவான ரா பிரிவு, ஐபி போன்றவற்றில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிலும் ரா பிரிவில் ஒன்பது ஆண்டுகள், அதில் மூன்று `ரா' கூடுதல் செயலாளர் பதவியில் இருந்துள்ளார் என்பதால் அவரை சிபிஐ இயக்குநர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

தனது தேர்வு குறித்து பேசியுள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால், ``சிபிஐ-யில் பணியாற்ற தொழில்முறை சார்ந்த திறன்களை மேம்படுத்தி உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாற்ற பங்களிப்பை வழங்குவேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலையரசு


Advertisement

Advertisement
[X] Close