[X] Close

விரைவுச் செய்திகள்: முதல்வரின் வேண்டுகோள் | கோயில் வாசலில் திருமணங்கள் | 'யாஸ்' புயல்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Quick-News-At-the-request-of-the-Chief-Minister-of-Tamil-Nadu-until-the-wedding-held-at-the-temple-gate

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் குறையவில்லை. மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையை அடுத்து, இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல். மே 31 வரை காய்கறி, மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள் இயங்க அனுமதியில்லை.

 • நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. அதேநேரம், இந்தியாவில் கடந்த ஒருவாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில், 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு, 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.
 • "கெஞ்சிக் கேட்கிறேன் தேவையின்றி வெளியே வராதீர்" கொரோனா சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை: கொரோனாவால் பாதிக்கவோ, பரப்பவோ மாட்டோம் என மக்கள் உறுதியேற்க வேண்டும். தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். அரசின் கட்டுப்பாடுகளைப் கடைப்பிடிப்பது நாட்டு மக்களின் இன்றியமையாத கடமை. மக்களின் நன்மைக்காகவே தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு. மருத்துவத் தேவைகளைத் தவிர்த்து மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 • மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறி திருமண மண்டபங்கள் மற்றும் மயூரநாதர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 50 திருமண மண்டபங்களில் பெரும்பாலானவற்றில் இன்று திருமண விழாக்கள் நடக்க இருந்த நிலையில், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் திருமண மண்டபங்களில் இருந்தவர்களை நேற்றிரவே வெளியேற்றினர். அதேசமயம், சில திருமண மண்டபங்களில் திட்டமிட்டபடி திருமணங்கள் நடைபெற்றன.
 • வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை எண்ணூர், புதுச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலின் மத்திய கிழக்குப் பகுதிகளில் சென்னைக்கு வடகிழக்கே சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் வடக்கு அந்தமான் அருகே உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி இருக்கிறது.
 • புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த 55வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 
 • தனிப்பட்ட காரணங்களால் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத 9 சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு, மே 11ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது. கொரோனா மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அன்றைய தினம் 10 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் 9 பேர் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
 • சென்னையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் கூறியுள்ளனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் மாணவிகள் பள்ளி முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.  சென்னை கே.கே.நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் மீதான பாலியல் புகாரையடுத்து, அவரை பிடித்து விசாரிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். > முழு விவரம்: சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் பாலியல் புகார்: ஆசிரியரிடம் விசாரிக்க காவல்துறை தீவிரம்
 • சென்னையில் பிரபல தனியார் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து, குற்றம் செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 • புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட நண்பனின் கல்லறையில், குழந்தை கையில் பட்டா கத்தி கொடுத்து கேக் வெட்டி சபதம் எடுத்த வீடியோ பரவி வருகிறது. திப்புராயபேட்டையைச்சேர்ந்த தீப்லான் என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். வழக்கில், தவீத், கவுசிக பாலசுப்பிரமணி, தணிகையரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர், இவர்களில் சிலர் தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் தீப்லானின் பிறந்தநாள் அன்று அவரது கல்லறையில், அவரது குழந்தை கையில் பட்டா கத்தி கொடுத்து, அவரது நண்பர்கள் கேக் வெட்டினர். மேலும், தீப்லானை கொலை செய்தவர்களை பழிதீர்க்க பாடல் பாடி சபதம் எடுத்துள்ளனர்.
 • விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் ஆயிரத்து 500லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து காவல்துறையினர் அழித்தனர். ஒட்டம்பட்டு வயல் பகுதியில், சிலர் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர், சாதாரண உடையணிந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது,சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆயிரத்து 500லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்த காவல்துறையினர், சாராயம் காய்ச்சியவர்களைத் தேடி வருகின்றனர்.
 • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 85ஆக்சிஜன் படுக்கை வசதியினை ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இரண்டாயிரத்து 779 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் பள்ளி விடுதியில் தற்காலிகமாக 85ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 • நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கீழ அரண்மனைத் தோட்டம் குடியிருப்பு பகுதியில், ஒரே தெருவில் ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியை தகரங்களால் அடைத்து, தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 • புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை எரிக்க வந்தவர்களுக்கும், மயான ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொரோனாவால் உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை எரிப்பதற்காக, கருவடிகுப்பம் மயானத்திற்கு அவரது உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது ஏராளமானோர் மயானத்திற்குள் நுழைய முயன்றதால், ஐந்து பேர் மட்டுமே வர வேண்டும் என மயானத்தில் இருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
 • மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்ய ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு மக்கள் தெரிவிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close